9-வது டி20 வெற்றி: சூர்யகுமார், புவனேஷ்வர் பிரமாதம்: 36 ரன்களுக்கு 7 விக்கெட்; இலங்கையை சுருட்டியது இந்திய அணி 

By க.போத்திராஜ்


சூர்ய குமாரின் அபார அரைசதம், புவனேஷ்வர் குமார், சஹல், வருண் ஆகியோரின் பந்துவீச்சு ஆகியவற்றால் கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து 38 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பெறும் 9-வது வெற்றியாகும்.

சர்வதேச அரங்கில் இந்தியா தொடர்ந்து பெறும் 7-வது வெற்றியாகும்.டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு அணியைத் தேர்வு செய்யும் முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் என்பதால், இளம் வீரர்கள் மீது பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3.3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச டி20 போட்டியில் 2-வது அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவுக்கும் ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும்.

இந்திய அணியில் தவண்(46), சூர்யகுமார் யாதவ்(50) இருவரும் சேர்த்ததே கவுரமான ஸ்கோராகும். மற்ற வீரர்கள் சாம்ஸன்(27), பாண்டியா(10), பிரித்வி ஷா(0) என ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் 20 ரன்னிலும், குர்னல் பாண்டியா 3 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி சேர்த்த 164 ரன்கள் என்பது உலகக் கோப்பை டி20 போட்டியை சில மாதங்களில் வைத்துக்கொண்டு, எதிரணிக்கு சவால் விடுக்கும் ஸ்கோர் என்று கூறிவிட முடியாது. ஆனால், அந்த ஸ்கோரையும் டிஃபென்ட் செய்து இலங்கை அணியைச் இந்திய அணி வீரர்கள் சுருட்டியுள்ளனர். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறதோ அதே அளவுக்கு இலங்கை அணியின் பேட்டிங்கும் சொத்தையாக இருக்கிறது என்று அர்த்தம்.

அறிமுகப் போட்டியில் களமிறங்கிய பிரித்வி ஷா முதல் பந்திலேயே ஆஃப் சைடில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு வி்க்கெட்டை இழந்தார். சாம்ஸன், தவண் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி 51 ரன்களைச் சேர்த்தனர். சாம்ஸனும் அறிமுகப் போட்டியில் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 27 ரன்னில் நடையைக் கட்டினார்.

தவண், சூர்யகுமார் யாதவ் களத்தில் இருந்தவரை அணியின் ஸ்கோர் 180 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. தவண் 46, சூர்யகுமார் 50 அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தபின், இந்திய அணியின் ரன்வேகமும் ஆட்டம் கண்டது. 180 ரன்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15 முதல் 20 ரன்கள் குறைவாகவே இந்திய அணி சேர்த்தது.

சூர்யகுமார் யாதவைப் பொறுத்தவரை தான் சந்தித்த 7-வது பந்திலேயே பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தத் தொடங்கி 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இலங்கை வீரர்கள் வீசும் ஸ்லோ பால், ஸ்விங் என அனைத்தையும் கச்சிதமாகக் கணித்து ஆடிய சூர்யகுமாரின் ஆட்டம் இந்தப் போட்டிக்கு மாஸ்டர் கிளாஸ்.
சூர்யகுமார், தவண் சென்றபின், இந்திய அணி, 12 ஓவரிலிருந்து 20 ஓவர்கள்வரை ஒரு பவுண்டரிக்கு மேல் அடிக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

டி20 போட்டிகளில் கடைசி 5 ஓவர்கள் ரன் சேர்க்க மிகவும் முக்கியமான ஓவர்கள் அதில் இந்திய அணி 43 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இலங்கை பந்துவீச்சாளர்கள் ஏராளமான ஸ்லோ பால்களை வீசினர் ஆனால் கணித்து ஆடுவதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக துஷ்மந்த் சமீரா, கருணாரத்னே இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர்.

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், சஹர், யஜுவேந்திர சஹல், வருண் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினர். புவனேஷ்வர் குமார் 3.3 ஓவர்கள் வீசினாலும் 10 டாட் பந்துகளை வீசி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சஹலும் 9 டாட்பந்துகளை வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை பவர்ப்ளேயில் ஓரளவுக்கு நன்றாகவே பேட் செய்து ஒருவிக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தனர். ஆனால், டி சில்வா(9) சஹல் பந்துவீச்சிலும், பெர்னான்டோ(26) புவனேஷ் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணி்க்குச் சரிவை ஏற்படுத்தினர்.

அதன்பின் இலங்கை அணியின் பேட்டிங்கில் மந்தநிலை தென்பட்டது. 5-வது ஓவரிலிருந்து 16-வது ஓவர் வரை இலங்கை அணி 69 ரன்கள்தான் சேர்த்திருந்தது 5 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இலங்கை அணியில் ஆறுதலான விஷயம் என்பது, அசலங்கா 3 சிக்ஸர், 3பவுண்டரி உள்பட 44 ரன்கள் சேர்த்ததுதான். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 36 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது

மோசமான பேட்டிங்கிற்கு உதாரணம். அதிலும் கடைசி 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை புவனேஷ்வர்குமார்தான் வீழ்த்தினார். 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு இலங்கையின் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்