விளையாட்டாய் சில கதைகள்: ஆற்றல் தந்த அம்மா

By பி.எம்.சுதிர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனைகளில் ஒருவர் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன். பூர்வீகம் தமிழகம் என்றாலும், தற்போது குஜராத் மாநிலத்தில் அவர் வசித்து வருகிறார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான அவர், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் அளவுக்கு தனக்கு ஆற்றல் அளித்தது தனது அம்மா சரோஜா வாலறிவன்தான் என்கிறார்.

இதுபற்றி கூறும் இளவேனில் வாலறிவன், “என் அம்மா சரோஜா வாலறிவன், குஜராத்தில் உள்ள ஆனந்த் பகுதியில் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக இருந்தார். தற்போது அவர் அகமதாபாத்தில் ஒருகல்லூரியில் முதல்வராக இருக்கிறார். சிறுவயதில் அவர் எங்களையும் கவனித்துக்கொண்டு, ஆசிரியப் பணியையும், அதற்கான பயணத்தை யும் எதிர்கொண்ட விதம் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும்.

தினமும் அதிகாலையில் எழும் அவர், வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அகமதாபாத்துக்கு ரயில் ஏறுவார். அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரம் ஆட்டோவில் பயணம் செய்து கல்லூரிக்கு செல்வார். இந்த சிரமத்துக்கு நடுவிலும் எங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார்.

இத்தனை கடினமான வாழ்க்கை வாழ்ந்தும், அவர் ஒருநாள்கூட நிதானம் தவறியதில்லை. எங்களிடம் கடிந்து பேசியதில்லை. அவர்தான் இன்றும் என் ரோல் மாடலாக இருக்கிறார். நான் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் அவரிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

அதுபோல் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், முதலில் என் அம்மாவிடம்தான் சொல்வேன். என் வெற்றிகளுக்காக என்றுமே அவர் கர்வம் கொண்டதில்லை. அதே நேரத்தில் தோல்வியடைந்தால், அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று ஆறுதல் அளிப்பார். எனது மிகப்பெரிய பலம் என் அம்மாதான்” என்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE