தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கேப்டன்சி மோர்கனிடம் அளிக்கப்பட்டது கம்பீருக்குப் பிடிக்கவில்லையோ?- சூசக தொனியில் கருத்து 

37 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் நேற்று திடீரென விலகி மோர்கனிடம் கேப்டன்சி மாற்றப்பட்டது. இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் சற்றே வேதனை தொனிக்கும் குரலில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரிலும் கொல்கத்தா அவ்வளவு மோசமாக இல்லை. 4ம் இடத்தில் இருந்தது. ஆனால் 7 போட்டிகளுக்குப் பிறகு கேப்டன் தினேஷ் கார்த்திக் கையைத் தூக்கி விட்டார், கேப்டன்சி வேண்டாம் என்று விலகினார்.

2008ம் ஆண்டு தாதா கங்குலி தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அதன் பிறகு கவுதம் கம்பீர் கேப்டன்சியில் இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றது, கம்பீர் ஒரு நல்ல அணியைக் கட்டமைத்தார்.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன்சி மாற்றம் அவருக்கு ஒருவேளை பிடிக்கவில்லையோ என்பதை சூசகமாகத் தெரிவிக்கும் வகையில், தன் ட்விட்டர் பக்கத்தில், “It takes years to build a legacy but a minute to destroy it” என்று ஒரு மரபைக் கட்டமைப்பதற்கு பல ஆண்டுகள் எடுக்கிறது, ஆனால் அழிக்க ஒரு நிமிடம் போதும் என்று சூசகமாக ட்வீட் செய்துள்ளார்.

இவர் கொல்கத்தா அணியின் மாற்றத்தை சுட்டுவதாகவே புரிந்து கொண்ட நெட்டிசன்களும் ’சரியான கருத்து’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2011-ல் இணைந்தார் கம்பீர். 7 ஆண்டுகள் அணியை கேப்டனாக வழிநடத்தினார். 2012, 2014-ல் கொல்கத்தாவை ஐபிஎல் சாம்பியன்களாக்கினார். 2018-ல் இவர் கொல்கத்தாவினால் கழற்றி விடப்பட்ட பிறகு டெல்லிக்கு சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE