சஞ்சு சாம்சன் சிக்ஸர்கள் எந்த மைதானமாக இருந்தாலும் வெளியே சென்றிருக்கும்: ஸ்டீவ் ஸ்மித் ஆச்சரியம்

By இரா.முத்துக்குமார்

ஷார்ஜாவின் குட்டி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 9வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 223 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி அதிக ஸ்கோர் விரட்டலுக்கான ஐபிஎல் சாதனையைப் படைத்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் 45 பந்துகளில் சதம் கண்டு 50 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது விரைவு சதம் கண்டு யூசுப் பதானுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

கேப்டன் கே.எல்.ராகுல் மீண்டும் ஒரு அற்புதமான இன்னிங்சில் 54 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார், இருவரும் சேர்ந்து 183 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்து ஐபிஎல் சாதனைப் பட்டியலில் இணைந்தனர். 224 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித் 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 எடுக்க, சஞ்சு சாம்சன் மீண்டும் தனது அனாயாச காட்டடியில் 4 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுக்க, ராகுல் திவேஷியா, மே.இ.பவுலர் காட்ரெலை ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி, 7 சிக்சர்களுடன் 31 பந்துகளில் 53 ரன்களை எடுத்து போட்டியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த அசாத்திய விரட்டல் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “இந்த விரட்டல் வேறு ஏதோ? இல்லையா!! பொதுவாக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் 10 ஓவர்கள் முடிவு வாக்கில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கருதினோம். ஏகப்பட்ட சிக்சர்கள் இங்கே, இதன் மூலம் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டோம்.

சஞ்சு சாம்சன் மைதானம் நெடுக பந்துகளை விரட்டினார். அனைவரது அழுத்தத்தையும் சேர்த்து விரட்டினார். பெரிய மைதானங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சாம்சனின் ஷாட்கள் எல்லாம் எந்த மைதானமாக இருந்தாலும் வெளியே சென்றிருக்கும்.

திவேஷியாவின் பேட்டிங்கை வலைப்பயிற்சியில் என்ன பார்த்தோமோ அதையே ஷெல்டன் காட்ரல் ஓவரிலும் பார்த்தோம். திவேஷியாவுக்கு பெரிய மனது அதனால் வெற்றி நம் பக்கம் என்று நம்பிக்கை ஏற்பட்டது. டைம் அவுட்டில் திவேஷியா என்னிடம் வெற்றி நம்பிக்கை அளித்தார். மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சர் அன்று இரவு 4 பந்துகளில் 4 சிக்சர்கள், இன்று 2சிக்சர்கள். பவுலர்கள் சிறப்பாகவே வீசினர் இல்லையெனில் 250 ரன்களை விரட்டியிருக்க நேரிட்டிருக்கலாம்” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE