இஷான் போரெல் இப்போதிருக்கும் பார்மில் விராட் கோலியையே வீழ்த்தி விடுவார்: பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் குறித்து முன்னாள் வீரர்

கொல்கத்தாவில் கர்நாடகா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி அரையிறுதியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் போரெலினால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 122 ரன்களுக்குச் சுருண்டது, மேலும் 2வது இன்னிங்சில் 352 ரன்கள் வெற்றி இலக்கை எதித்து ஆடிவரும் கர்நாடகாவின் பார்மில் உள்ள பேட்ஸ்மென் கே.எல்.ராகுலை டக் அவுட் ஆக்கியதால் போரெல் புகழ் தற்போது கொடிகட்டிப் பறக்கிறது.

கர்நாடகா அணி 98/3 என்ற நிலையில் இன்றைய ஆட்ட முடிவில் படிக்கல் 50 ரன்களுடனும், மணீஷ் பாண்டே 11 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். வெற்றிக்கு இன்னமும் 254 ரன்கள் தேவை. கேப்டன் கருண் நாயரும் சொற்ப ரன்களில் வெளியேறினார். ராகுலை கூர்மையான இன்ஸ்விங்கரில் எல்.பி.செய்து டக் அவுட் ஆக்கிய இஷான் போரெல் பற்றி பெங்கால் ரஞ்சி அணியின் பயிற்சியாளர் அருண் லால் கூறும்போது, போரெலுக்கு வயது 21.

“போரெல் பெரிய பார்மில் இருக்கிறார். கே.எல்.ராகுல், ஏன் விராட் கோலி போன்ற பெரிய பேட்ஸ்மென்களையே வீழ்த்தும் பந்துகளை அவர் சாதாரணமாக வீசி வருகிறார். அம்மாதிரியான பவுலிங்கைச் செய்து வருகிறார் போரெல்.

அந்த மாதிரி லெந்தில், திசையில் போரெல் வீசி வருகிறார். லெக் ஸ்டம்புக்கு வெளியே ஒரு பந்தைக் கூட அவர் வீசி பார்த்ததில்லை. எப்போதும் பேட்ஸ்மென்களை கடுமையாகச் சோதிக்கிறார். அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதில்லை, அவரது சிக்கனம் இன்னும் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதாகும். கே.எல்.ராகுல் தன் பார்மின் உச்சத்தில் இருக்கிறார். அவரை வீழ்த்துவது என்பது போரெலுக்கு ஒரு சாதனையே.

போரெல் ஆந்திராவுக்கு எதிராக லெந்த்தில் இருந்து எழும்பச் செய்த ஒரு பந்தில் இன்னொரு டெஸ்ட் வீரரான ஹனுமா விஹாரியை வீழ்த்தினார். ஆம் போரெல் இந்திய அணிக்குத் தயாராகி விட்டார். ஏறக்குறைய அந்த இடத்தில் இருக்கிறார்.

பெரிய வீரர்களை வீழ்த்தும் திறமை இவரிடம் உள்ளது, அவர் வேகமாக வீச தொடர்ச்சியாக அவருக்கு ஓவர்களை அளித்து வருகிறோம்” என்றார் அருண்லால்.

இதற்கிடையே 352 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி பெங்காலை வெளியேற்றி இறுதிக்குள் நுழைவோம் என்று கர்நாடகா வீரர் கே.கவுதம் சூளுரைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE