அஸ்லன் ஷா ஹாக்கி: நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி

அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்தது.

மலேசியாவின் ஈபோ நகரில் 24-வது அஸ்லன் ஷா ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது.

இந்நிலையில் நேற்று பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் 30 நிமிடத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர். எனினும் கோல் எதுவும் எடுக்க முடிய வில்லை.

இந்திய அணியின் தடுப்பாட்டை முறியடித்து 38-வது நிமிடத்தில் நியூஸிலாந்து கேப்டன் சிமோன் சைல்ட் கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதையடுத்து உத்வேகமடைந்த இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். இதற்கு ஆட்டத்தின் 43-வது நிமிடத்திலேயே பலன் கிடைந்தது. இந்திய அணியின் ஸ்ட்ரைக்கர் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்தார். ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது.

இதனால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணியினரும் கோல் அடித்து முன்னிலை பெற கடுமையாக முயற்சித்தனர். இந்த போராட்டத்துக்கு ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் முடிவு கிடைத்தது. நியூஸிலாந்து அணிக்கு கிடைந்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஆன்டி ஹேவர்ட் கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இதன் பிறகு ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே நியூஸிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இப்போட்டித் தொடரில் 2-வது வெற்றியை நியூஸிலாந்து பதிவு செய்தது. இந்திய அணி முதல் போட்டியை டிரா செய்து 2-வது போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

இந்திய அணி போட்டியை நடத்தும் நாடான மலேசியாவை நாளை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, தென் கொரியா, கனடா ஆகிய நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE