உலகக் கோப்பையை வென்றால் இலங்கை அணி வீரர்களுக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக அளிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
அரசுச் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்ன கூறும்போது, “உலகக் கோப்பையை மீண்டும் வெற்றி பெற்று நாட்டுக்குக் கொண்டு வந்து பெருமை சேர்த்தால் இலங்கை அணிக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக வழங்கப்படும்.” என்றார்.
1996-ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்றது. அதன் பிறகு 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிக்கு தகுதி பெற்றது.
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை வென்றபோது, அந்த அணி வீரர்களுக்கு கார்கள், வீடுகள் மற்றும் நிலம் வழங்கப்பட்டது. இது தவிர பெரிய தொகை ஒன்றும் அளிக்கப்பட்டது.
காயத்தின் சுவடின்றி ஆடிய மைக்கேல் கிளார்க்:
வங்கதேச வீரர்களுக்கு எதிரான ஒரு பயிற்சி ஆட்டத்தில் மைக்கேல் கிளார்க் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகியவற்றில் காயத்தின் சுவடின்றி விளையாடினார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா வரவேற்பு லெவன் அணிக்கு ஆடிய கிளார்க் 34 ரன்களை எடுத்தார். 2 ஓவர்கள் பந்து வீசினார், மேலும் ஸ்லிப்பில் ஒரு நல்ல கேட்சையும் எடுத்தார். 32 ஓவர்கள் அவர் களத்தில் இருந்தார்.
பேட்டிங்கில் 36 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த கிளார்க் லெக் ஸ்பின்னர் சபீர் ரஹ்மான் பந்தை எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார்.
ரன்கள் ஓடும்போது வேகமாக ஓடவில்லை. ஜாகிங் செல்வது போல்தான் ரன்களை எடுத்தார்.
10 லட்சத்தை எட்டும் டிக்கெட் விற்பனை
உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்காக இதுவரை விற்றுள்ள டிக்கெட்டுகள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டவுள்ளது.
இதுவரை 7,50,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. மொத்தமாக 10 லட்சம் பேர் போட்டிகளைக் காண்பார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
பாக். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கானுக்கு பதிலாக ரஹத் அலி
உலகக்கோப்பை அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய ஜுனைத் கானுக்கு பதிலாக ரஹத் அலி என்ற மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் பாக். அணியில் சேர்க்கப்படவுள்ளார்.