உலகக்கோப்பை போட்டிகளில் ரோஹித் சர்மா, புவனேஷ் குமார் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால் இஷாந்த் சர்மா நிலை சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
ரோஹித் சர்மா, புவனேஷ் குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முழு உடற்தகுதி பெற்றதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இஷாந்த் சர்மாவைப் பொறுத்தவரை இரண்டு விதமான செய்திகள் எழுந்துள்ளன. ஒன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரை உடற்கூறியல் நிபுணர் சோதனை செய்து அதன் பிறகு முடிவெடுப்பார் என்று ஒரு தகவல் கூறுகிறது.
மற்றொரு தகவல், அவர் உடல் தகுதி பெறவில்லை உலகக்கோப்பை போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்றும் இந்தியா திரும்புகிறார் என்றும் அவருக்கு பதிலாக மோஹித் சர்மா விளையாடுகிறார் என்றும் பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி கூறுகிறது. அதனால் இஷாந்த் சர்மா நிலைமை இப்போது சந்தேகம் என்ற அளவில் உள்ளது.
நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்பாக இன்று அடிலெய்டில் வலைப்பயிற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டனர். அப்போது ரோஹித் சர்மா நீண்ட நேரம் வலையில் பேட் செய்தார். புவனேஷ் குமாரும் எந்த வித அசவுகரியமும் இல்லாமல் பந்துவீசினார்.
இன்று வலைப்பயிற்சியில் முழு அணியும் பயிற்சியில் ஈடுபட்டன, மோஹித் சர்மா, தவல் குல்கர்னி ஆகியோர் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ரோஹித் சர்மா தனது உடல் தகுதி பற்றி கூறும்போது, “பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவேன். மேலும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன்.
புவனேஷ் குமார் கூறும்போது, “நான் முழுதும் உடற்தகுதி பெற்றுவிட்டேன். கடந்த 3-4 நாட்கள் அருமையாக அமைந்தது. உலகக்கோப்பை போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.” என்றார்.