இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் தோனிக்கு நேற்று மாலை பெண் குழந்தை பிறந்துள்ளது.
தோனியின் மனைவி சாக்ஷியும், குழந்தையும் நலமாக இருப்பதாக குர்கவானில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குர்கவானில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் நேற்று மாலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.7 கிலோ எடை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக தோனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக தோனியுடன் அவரது மனைவி சாக்ஷியும் தொடர்களின் போது வருகை தருவது வழக்கம்.
'உலகக்கோப்பை போட்டிகளுக்கான தேசக்கடமையில் இருப்பதால் மற்ற விவகாரங்கள் இப்போதைக்கு காத்திருக்கட்டும்.’ என்று கூறிய தோனி, 'தாயும் சேயும் நலம்’ என்று அடிலெய்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தோனிக்கும்-சாக்ஷிக்கும் 2010-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.