விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஓய்வு பெற்றார்

ஐஏஎன்எஸ்

முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 437 ரன்களை 23 ரன்கள் சராசரியுடன் எடுத்துள்ளார். இரண்டு அரைசதங்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் எடுத்துள்ளார்.

அவரது ஓய்வு குறித்து வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல், “ஆகாஷ் சோப்ரா இந்தியா உருவாக்கிய சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர். உள்நாட்டு கிரிக்கெட்டில் நீண்ட காலம் பங்களிப்பு செய்துள்ளார். ரஞ்சி கோப்பையை வென்ற டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும், பாகிஸ்தானில் 2003-04-இல் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற போது ஆகாஷ் சோப்ரா முக்கிய வீரராக திகழ்ந்தார். பிசிசிஐ சார்பாக அவருக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது சேவாகுக்கு உறுதுணையாக தொடக்க வீரராகக் களமிறங்கி சிறிய பங்களிப்பு என்றாலும் முக்கியமான பங்களிப்பை செய்தவர் ஆகாஷ் சோப்ரா. சேவாக், மற்றும் சோப்ராவின் தொடக்கமே அந்தத் தொடரில் ராகுல் திராவிடை ஒரு பெரிய பேட்ஸ்மெனாக சிறப்புறச் செய்தது என்றால் அது மிகையாகாது.

2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் இவர் பார்ம் போக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் இவர் 162 போட்டிகளில் 10,839 ரன்களை குவித்தார். அதில் 29 சதங்களும் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 301 ரன்களும் அடங்கும்.

டெல்லி அணிக்காக 1997-98-ல் ஆகாஷ் சோப்ரா அறிமுகமானார். பிறகு 2010-இல் ராஜஸ்தான் அணிக்குச் சென்றார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை பிரதிநிதித்துவம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT