100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் போல்ட்

மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கம் வென்றார்.

பந்தய தூரத்தை அவர் 9.95 விநாடிகளில் கடந்தார். அமெரிக்காவின் இசியா யங் 9.98 விநாடிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் அகானி சிம்பைன் 3-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 10.02 விநாடிகளில் கடந்தார். லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக தடகள போட்டியுடன் ஓய்வு பெற உள்ள உசேன் போல்ட், ஐரோப்பிய நாடுகளில் இந்த சீசனில் பங்கேற்ற 2-வது போட்டி இதுவாகும்.

ஒலிம்பிக்கில் 9 தங்கம், உலக தடகள போட்டியில் 11 தங்கம் வென்றுள்ள உசேன் போல்டின் மின்னல் வேக ஓட்டத்தைக் காண, மொனாக்கோ மைதானத்தில் குளிர்ந்த வானிலையையும் பொருட்படுத்தாமல் 17 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். வெற்றி குறித்து உசேன் போல்ட் கூறும்போது, “மீண்டும் ஒரு முறை 100 மீட்டர் ஓட்டத்தை 10 விநாடிகளுக்குள் கடந்தது சிறப்பான விஷயம்.

சரியான திசையில் நான் சென்று கொண்டிருக்கிறேன், எனினும் இன்னும் அதிக வேலை செய்ய வேண்டியது உள்ளது. 10 விநாடிகளுக்குள் இலக்கை கடப்பது எப்போதுமே சிறந்தது தான். எப்போதும் கலவையான உணர்ச்சிகள் இருக்கின்றன. எனது தடகள வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அது நிறைவடைய உள்ளதை சோகமாக உணர்கிறேன்” என்றார்.

2009-ம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.58 விநாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்திருந்தார். இந்த சாதனை இதுவரை அவராலும் கூட முறியடிக்கப்படாமல்உள்ளது.

எனினும் இந்த சீசனில் உசேன் போல்ட் பங்கேற்ற போட்டிகளில் தற்போது தான் 10 விநாடிகளுக்குள் பந்தைய தூரத்தை அடைந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கிங்ஸ்டன் போட்டியில் 10.03 விநாடிகளிலும், ஓஸ்டிராவா போட்டியில் 10.06 விநாடிகளிலும் இலக்கை அடைந்திருந்தார் உசேன் போல்ட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE