பாக்னர் விளாசலில் ஆஸி. த்ரில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.

301 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலியா 44 ஓவர்களில் 244 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 6 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தனிநபராக நின்று வெளுத்து வாங்கிய ஜேம்ஸ் ஃபாக்னர், ஆஸிக்கு வெற்றி தேடித்தந்தார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் அலாஸ்டர் குக் 22, ஜோ ரூட் 2, கேரி பேலன்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, பெல்லுடன் இணைந்தார் இயோன் மோர்கன். இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. 84 பந்துகளைச் சந்தித்த பெல் 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த போபாரா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோஸ் பட்லர் களம்புகுந்தார். மறுமுனையில் மோர்கன் 70 பந்துகளில் அரைசதம் கண்டார்.

இதன்பிறகு வெளுத்து வாங்கிய மோர்கன், அடுத்த 24 பந்துகளில் சதம் கண்டார். இங்கிலாந்து 295 ரன்களை எட்டியபோது ஜோஸ் பட்லர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். 99 பந்துகளைச் சந்தித்த மோர்கன் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது.

பாக்னர் அதிரடி

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் ரன் ஏதுமின்றியும், வார்னர் 18 ரன்களிலும், கேப்டன் கிளார்க் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஷான் மார்ஷ் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பிறகு வந்த ஜார்ஜ் பெய்லி 24, பிராட் ஹேடின் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் 39 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு கோல்ட்டர் நீல் 16, ஜான்சன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 44 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது ஆஸ்திரேலியா. அப்போது ஃபாக்னருடன் இணைந்தார் கிளின்ட் மெக்காய். கடைசி 6 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டதால், ஆஸ்திரேலியா தோற்றுவிடும் நிலை ஏற்பட்டது. கிளின்ட் மெக்காயை ஒருபுறம் நிறுத்திக் கொண்டு, பென் ஸ்டோக்ஸ் வீசிய 45-வது ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினார் ஃபாக்னர். அந்த ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய ஃபாக்னர், ஸ்டோக்ஸ் வீசிய 47-வது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினார்.

ஸ்டோக்ஸ் வீசிய 49-வது ஓவரில் மேலும் இரு சிக்ஸர்களை விளாசிய ஃபாக்னர், பிரெஸ்னன் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விரட்ட, 3 பந்துகள் எஞ்சிய நிலையில் 9 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. ஃபாக்னர் 47 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 69, மெக்காய் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஃபாக்னர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE