இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஏன் இந்த பிடிவாதம்?

By ஏ.வி.பெருமாள்

இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சஸ்பெண்ட் செய்யப்பட்டு சரியாக ஓராண்டைக் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான பிரச்சினை இன்னுக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. சவ்வாக இழுத்துக் கொண்டே போகிறது. இன்னும் எவ்வளவு நாள்கள் இந்த பிரச்சினை ஓடும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பெண்ட் எப்போது நீக்கப்படும் என்பது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களோ நமக்கு விடிவுகாலம் பிறக்காதா என காத்திருக்கிறார்கள்.

காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அந்த சங்கத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி சஸ்பெண்ட் செய்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி), இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்தது.

ஐஓஏ மீதான தற்காலிக முடக்கத்தை நீக்குவதற்காக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் அதிலிருக்கும் முட்டுக்கட்டைகள் இன்னும் தகர்ந்தபாடில்லை. இதற்கு யார் காரணம் என்றால், அது ஐஓஏதான் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் ஐஓஏ நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது ஐஓசி.

நல்ல விஷயம்தானே அப்படியொரு திருத்தத்தைக் கொண்டு வருவதில் என்ன பிரச்சினை என தோன்றலாம். ஆனால், அப்படியொரு திருத்தம் கொண்டு வரப்பட்டால் இந்திய விளையாட்டுத் துறையில் நிர்வாகிகளாக இருக்கும் பெரும்பாலான பெரிய மனிதர்கள் வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் அந்தத் திருத்தத்தை செய்யாமல் இன்று வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள்.

ஐஓசி எச்சரிக்கை

கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற ஐஓஏவின் செயற்குழு கூட்டத்தில் சட்டத்திருத்தம் தொடர்பான கருத்துரு தயாரிக்கப்பட்டு ஐஓசிக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐஓஏவின் நீதி நெறிக்குழு முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதை உடனடியாக நிராகரித்த ஐஓசி, தாங்கள் கூறியபடி சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால் ஐஓஏவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த 8-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஐஓஏ கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அப்போதே ஐஓஏ தேர்தல் தேதியும் (பிப்ரவரி 9) அறிவிக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் பனோட் மற்றும் அபய் சிங் சௌதாலா ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது “இந்திய வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐஓஏ தேர்தலில் போட்டியிடுவதில்லை என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்” என சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான அபய் சிங் சௌதாலாவும், பொதுச் செயலரான லலித் பனோட்டும் தியாகிகளாகப் பேசிக் கொண்டார்கள். ஐஓசியின் கிடுக்கிப் பிடியில் இருந்து தப்பிக்க வழியின்றிதான் இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என கூறினார்களே தவிர, விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அல்ல என்பது உலகறிந்த விஷயம்.

குளிர்கால ஒலிம்பிக்

இதனிடையே ஐஓஏவின் சட்டத்திருத்தத்தால் மகிழ்ச்சியடைந்த ஐஓசி தலைவர் தாமஸ் பேச், “ரஷியாவின் சோச்சியில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ்தான் பங்கேற்க வேண்டும். ஒருவேளை அதற்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெற்றுவிட்டால், அதன் மீதான சஸ்பெண்ட் நீக்கப்படுவதோடு, இந்தியர்கள் அவர்களின் தாய் நாட்டு தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படும்” என அறிவித்தார்.

பிப்ரவரி 9-க்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெறும் பட்சத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஐஓஏ மீதான தடை நீக்கப்பட்டுவிடும் என எதிர்பா்க்கப்பட்ட நிலையில் அடுத்த பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. கடந்த 8-ம் தேதி சட்டத்திருத்தம் செய்யப்பட்டதில் ஒரு ஓட்டை இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது ஐஓசி. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், அது தொடர்பாக ஐஓஏவின் நீதி நெறிக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதுதான் அந்த ஓட்டை. இந்த ஓட்டை தெரியாமல் விழுந்ததல்ல, ஊழல்வாதிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மீண்டும் நுழைவதற்காக திட்டமிட்டு போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

தடை நீக்கப்படாது

இதனால் கோபமடைந்துள்ள ஐஓசி, உங்களின் சட்டத்திருத்தம் முழு மகிழ்ச்சியளிக்கவில்லை. பிப்ரவரி 9-ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் கூறியதுபோல் முழுமையான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படியொரு திருத்தம் கொண்டு வராத வரையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை நீக்கப்படாது என எச்சரித்திருக்கிறது.

சட்டத்திருத்தத்தில் தேவையில்லாத ஊகங்களையும், சந்தேகத்திற்குரிய விளக்கங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள ஐஓசி, “ஐஓஏ நிர்வாகியாக இருக்கும் ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது அவர் தானாகவே ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பளிக்கும் வரையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஐஓஏவுக்குள் நுழைய முடியாது. ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ, அவரை மீண்டும் பதவியில் அமர்த்தவோ ஐஓஏ நீதி நெறிக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது” என தெளிவாகக் கூறியிருக்கிறது.

சிலர் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பதவியில் இருந்துவிட்டபோதும் கூட அங்கிருந்து வெளி யேற அவர்களுக்கு மனமில்லை. தங்களின் பதவியைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதோடு, பல்வேறு வெளிநாடுகளையும் இலவசமாக சுற்றிப்பார்த்து விட்டனர். ஒருவேளை அவர்கள் பதவியில் இருந்து விலகினாலும், தங்களின் பிள்ளைகளையோ, பினாமிகளையோதான் அந்தப் பதவியில் அமர்த்த வழி பார்ப்பார்கள். இதுதான் ஆண்டாண்டு காலமாக இந்திய விளையாட்டுத் துறையில் நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் விளையாட்டுத் துறைக்கு பணத்தை ஒதுக்கிவிட்டு, இந்தத் திட்டத்துக்கு இத்தனைக் கோடி ஒதுக்கியிருக்கிறோம் என்று விளம்பரப் படுத்துவதோடு தங்களின் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றன. கடந்த காலங்களில் விளையாட்டை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுச் சங்கங்களை முறைப்படுத்தவும் மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிகள்கூட ஊழல்பேர் வழிகளின் நெருக்கடியால் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

தாய் நாட்டுக் கொடி

இந்திய அரசு செய்யாத நல்ல காரியத்தை இப்போது ஐஓசி செய்திருக்கிருக்கிறது. ஐஓசியின் பிடி இறுகியதால் ஐஓஏவுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது.

இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது. ஊழல்பேர்வழிகளை வெளியேற்றி நேர்மையானவர்களையும், முன்னாள் விளையாட்டு வீரர்களையும் ஐஓஏவுக்கு நிர்வாகிகளாக் கொண்டு வரவேண்டும். இந்திய வீரர்கள் தங்கள் தாய்நாட்டின் தேசியக் கொடியுடன் சர்வதேசப் போட்டிகளில் தலைநிமிர்ந்து பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டிய நேரமிது.

விளையாட்டுத் துறையில் ஊழல்பேர்வழிகள் இல்லாத நிலையை 5 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்திருந்தால் காமன்வெல்த் ஊழல் என்ற கறை இந்தியாவின் மீது படிந்திருக்காது. இந்தியாவுக்கும் சர்வதேச அரங்கில் தலைக்குனிவு ஏற்பட்டிருக்காது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

மேலும்