சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க பிசிசிஐ அனுமதி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க டெல்லியில் நடந்த பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் தேர்வு இன்று நடக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் சர்வதேச அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் கலந்துகொள்ளும் அணிகளை அறிவிப்பதற்கான கடைசி நாள் கடந்த மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மூலம் கிடைக்கும் வருவாயை பங்கிடுவதில் ஐசிசி அமைப்புக்கும், பிசிசிஐ அமைப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் இந்தியா மட்டும் அணியை அறிவிக்காமல் இருந்தது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை, நடப்பு சாம்பியனான இந்தியா புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பிசிசிஐயின் (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்துகொள்ள இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்துகொள்ள டெல்லியில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்போட்டியில் ஆடும் இந்திய அணி திங்கள்கிழமை (இன்று) தேர்வு செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வருவாய் பங்கீடு தொடர்பாக ஐசிசி அமைப் புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஆடும் இந் திய அணி இன்று அறிவிக்கப்படும் நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிவரும் ரிஷப் பந்த், ஷிகர் தவண், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு இந்த அணி யில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE