பயஸுக்கு 40 - பார்ட்னர்ஷிப்புக்கு 95

இந்திய டென்னிஸின் நம்பிக்கை நட்சத்திரமான லியாண்டர் பயஸ், தனது 23 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில், 95-வது வீரருடன் ஜோடி சேர்ந்துள்ளார். தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில் பயஸுடன் ஜோடி சேர்ந்துள்ள இத்தாலியின் டேனிலே பிரேச்சியாலிதான் அவருடைய 95-வது பார்ட்னர்.

40 வயதை எட்டியபோதும் இளமை குன்றாமல் விளையாடி வரும் பயஸ், சமீபத்தில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக்குடன் இணைந்து உலகின் முதல் நிலை ஜோடியான அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

தொடர் போட்டியின் காரணமாக சோர்வடைந்துள்ள ஸ்டெபானெக் ஓய்வெடுக்க முடிவெடுத்ததால், இப்போது 95-வது பார்ட்னருடன் சேர்ந்து தாய்லாந்து ஓபனில் களமிறங்கியுள்ளார் பயஸ்.

இதேபோல் பயஸுடன் நீண்டகாலம் இணைந்து விளையாடியவரான இந்தியாவின் மற்றொரு டென்னிஸ் நட்சத்திரமான மகேஷ் பூபதி, தாய்லாந்து ஓபனில் ஸ்வீடனின் ராபர்ட் லின்ட்ஸ்டெட்டுடன் இணைந்து விளையாடினார். லின்ட்ஸ்டெட் பூபதியின் 72-வது பார்ட்னர் ஆவார்.

பயஸ் இதுவரை ஆடவர் இரட்டையர் பிரிவில் 8 பட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் 6 பட்டங்கள் என மொத்தம் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மார்ட்டினா நவரத்திலோவா உள்ளிட்ட 3 வீராங்கனைகளுடன் இணைந்து பயஸ் பட்டம் வென்றுள்ளார்.

மகேஷ் பூபதி ஆடவர் இரட்டையர் பிரிவில் 4 பட்டம், கலப்பு இரட்டையர் பிரிவில் 8 பட்டம் என மொத்தம் 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE