விளையாட்டு

விரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் விளையாடிய ரிச்சா கோஷ்: பயிற்சியாளர் பகிர்வு

வேட்டையன்

அகர்த்தலா: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷின் பங்கு முக்கியமானது. இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் அவர் ஈடுபட்டார்.

இந்திய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வரும் நிலையில் இடது கை நடுவிரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் ரிச்சா கோஷ் விளையாடியதாக அவரது பயிற்சியாளர் ஷிப் ஷங்கர் கூறியுள்ளார்.

“நான் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ரிச்சா என் மாணவி அல்ல எனது மூத்த மகள். நான் பந்து த்ரோ செய்து பயிற்சி எடுத்த அவர் இன்று உலக சாம்பியன். எனது குடும்பம் மற்றும் சக கிரிக்கெட் வட்டார நபர்கள் என எல்லோரும் மகிழ்ச்சி உடன் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ரிச்சாவின் தந்தை மனபேந்திராதான்.

இந்த தொடரில் நாக்-அவுட் சுற்றில் விரல் பகுதியில் ஹேர்லைன் கிராக் காயம் ஏற்பட்டது. அதோடு தான் அவர் பேட் செய்தார். அந்த வலியை தாங்கிக் கொண்டு அவர் விளையாடினார். அது அவரது மன உறுதியை சொல்லும் வகையில் உள்ளது. எந்த இடத்தில் பேட் செய்தாலும் உனது ஷாட் மீது நம்பிக்கையாக இருக்க வேண்டுமென நான் அவரிடம் சொல்வேன். அதை அவரும் செய்தார். அவரது வருகைக்காக நாங்கள் எல்லோரும் காத்துள்ளோம்” என பயிற்சியாளர் ஷிப் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் 8 இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்துள்ளார் ரிச்சா கோஷ். அவரது ஸ்ட்ரைக் ரேட் 133.52. மொத்தம் 12 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இந்த தொடரின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் (185 ரன்கள்) எடுத்த வீராங்கனையாகவும் அவர் உள்ளார்.

SCROLL FOR NEXT