ஹூஸ்டன்: நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா. காலிறுதியில் ஈக்வேடாரை அந்த அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினஸ் அற்புதமாக இரண்டு ஷாட்களை பெனால்டி ஷூட் அவுட்டில் தடுத்திருந்தார்.
இந்தப் போட்டி அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் நடைபெற்றது. முதல் பாதியில் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினஸ் முதல் கோலை பதிவு செய்தார். பந்து அர்ஜென்டினா அணியின் கட்டுப்பாட்டில் இருந்த சூழலில் இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் நிலை மாறியது.
ஈக்வேடாரும் சமமான சவாலை அளித்தது. தங்களுக்கான கோல் வாய்ப்பை ஏற்படுத்துவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதன் பலனாக ஸ்டாப்பேஜ் டைமின் முதல் நிமிடத்தில் ஈக்வேடார் அணியின் கெவின் ரோட்ரிக்ஸ் கோலை பதிவு செய்தார். அதன் காரணமாக ஆட்டம் 1-1 என சமனில் இருந்தது.
இந்த ஆட்டம் 90 நிமிடங்கள் மற்றும் 8 நிமிடங்கள் ஸ்டாப்பேஜ் டைமுடன் நிறைவுபெற்றது. கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியை தவிர மற்ற எந்த போட்டியிலும் கூடுதல் நேரம் (எக்ஸ்ட்ரா டைம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் முழு நேரம் முடிந்த பிறகு இரு அணிகளும் 1-1 என கோல்களில் சமனாக இருந்தன. அதனால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது.
இதில் முதல் வாய்ப்பை மிஸ் செய்தார் மெஸ்ஸி. அவர் உதைத்த பந்து கோல் கம்பத்தின் மேல் பக்கம் உள்ள கம்பத்தில் பட்டு விலகி சென்றது. அடுத்த நான்கு வாய்ப்புகளை கோல்களாக மாற்றினர் அர்ஜென்டினா வீரர்கள். அதே நேரத்தில் ஈக்வேடாரின் இரண்டு ஷாட்களை தடுத்திருந்தார் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினஸ். அதன் மூலம் அரையிறுதிக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது. அதில் கனடா அல்லது வெனிசுலாவை எதிர்கொள்ளும்.