கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்தியாவின் டி.குகேஷ்

By செய்திப்பிரிவு

டொராண்டோ: உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்றது. 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 71-வது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.

இதன் மூலம் 9 புள்ளிகளுடன் குகேஷ்முதலிடத்தில் இருந்தார். எனினும் அவர்,பட்டம் வெல்வது என்பது ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டத்தின் முடிவை பொறுத்தே இருக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.

ஏனெனில் இவர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் அவர், 9 புள்ளிகளுடன் முதலிடத்தை குகேஷுடன் பகிர்ந்து கொள்ளக்கூடும். இந்த நிலை உருவானால் வெற்றியாளர் யார்? என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்படும்.

இதனால் நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருனா ஆட்டம் மிகுந்தபரபரப்பை உருவாக்கியது. குகேஷ் ஆட்டம் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு 15 நிமிடங்கள் வரை நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருனா மோதிய ஆட்டம் தொடர்ந்தது. பலமுறை ஃபேபியானோ கருனா வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தார்.

ஆனால், 39-வது காய் நகர்த்தலின் போது அவர், செய்த தவறால் நெபோம்னியாச்சி தனது நிலையை தக்கவைத்தார். இதன் பின்னர் மீண்டும் தனது ஆட்டத்தை கட்டியெழுப்பிய ஃபேபியானோ கருனா வெற்றிக்கு அருகே நெருங்கினார். ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட்டது. முடிவில் ஆட்டம் டிரா ஆனது.

முடிவில் 17 வயதான டி.குகேஷ் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சுமார் ரூ.78.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் குகேஷ். இதற்கு முன்னர் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தார்.

மேலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ள இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் 17 வயதான குகேஷ். இந்த வகையில் 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடி இருந்தார்.

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் குகேஷ், சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இந்த போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

சாதிக்க வித்திட்ட 7-வது சுற்று தோல்வி: கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்ற பின்னர் டி.குகேஷ் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியதாக நன்றாக உணர்ந்தேன், ஆனால் அலிரேசாவுக்கு எதிரான 7-வது சுற்றில் தோல்விடைந்த பிறகு, மிகவும் வருத்தப்பட்டேன். அந்த தோல்வி வேதனையாக இருந்து.

ஆனால் அடுத்த நாள் ஓய்வு இருந்தது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருந்தது. மேலும் அந்த தோல்வி எனக்கு ஆற்றலையும் உந்துதலையும் கொடுத்தது. தோல்விக்குப் பிறகு சரியானதைச் செய்தால், சரியான மனநிலையில் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று உணர்ந்தேன்.

போட்டியின் தொடக்கத்திலிருந்தே செயல்முறையை நம்பினேன், சரியான மனநிலையில் இருப்பதையும், சரியான ஆட்டத்தை விளையாடுவதிலும் கவனம் செலுத்தினேன். தொடர் முழுவதும் இதை என்னால் சிறப்பாகச் செய்ய முடிந்தது. ஆட்டத்தின் முடிவுகள் நான் விரும்பியபடி அமைந்ததில் நான் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன்.

கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கு போட்டியிட உள்ள இளம் சாலஞ்சரான தருணம் மிகவும் அழகானதாக உணர்ந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றிருந்தாலும் முதலிடத்தை என்னுடன் பகிர்ந்திருப்பார்கள். இதன் பின்னர் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலை உருவாகி இருக்கும்.

இதனால் டைபிரேக்கர் ஆட்டத்துக்கு தயாராக இருந்தேன். இதுதொடர்பாக எனது பயிற்றுனருடன் ஆலோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் நாங்கள் விவாதிக்கத் தொடங்கிய உடனேயே அது தேவையில்லை என்பதை நாங்கள் அறிந்தோம்.

உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைப் பற்றி சிந்திக்க எனக்கு அதிக நேரம் இல்லை. எனினும் அந்த போட்டிக்கு நாங்கள் மேற்கொள்ள உழைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். விஸ்வநாதன் ஆனந்த், என்னை வாழ்த்தினார். அவருடன் பேச எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் விரைவில் அவரை தொடர்பு கொள்வேன் என்று நம்புகிறேன்.

என் பெற்றோரிடம் பேசினேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது பயிற்சியாளர், ஸ்பான்சர் மற்றும் சில நண்பர்களுடன் சிறந்த முறையில் நேரத்தை செலவிட்டேன். நிறைய பாராட்டுகள் குறுந்தகவல்களாக வந்துள்ளன. அவற்றுக்கு பதிலளிக்கவும், எனது நண்பர்களுடன் பேசவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தற்போது சில நாட்கள் ஓய்வெடுக்கப் போகிறேன், கடந்த மூன்று வாரங்களாக போட்டி மிகவும் மன அழுத்தத்தை தந்தது.

ஓய்வுக்கு பின்னர் உலக சாம்பியன்ஷிப் போட்டியைப் பற்றி சிந்திப்பேன், விஷயங்களை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறத்து திட்டமிடுவேன். பொதுவான திட்டம் என்பது சிறந்த ஆட்டத்தை விளையாடுவதில் கவனம் செலுத்துவதுதான். மேலும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு குகேஷ் கூறினார்.

தியாகம் செய்த பெற்றோர்: செஸ் உலகில் குகேஷ் சிகரங்களை அடைவதற்கு அவரது பெற்றோர் செய்த தியாகங்களும் நினைகூரப்பட வேண்டியது அவசியம். குகேஷின் தந்தை ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தாய் பத்மா நுண்ணுயிரியலாளர் ஆவார்கள்.

2017-18ம் ஆண்டு குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நார்ம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருந்தது.

இதனால் ரஜினிகாந்த் தனது பணியை நிறுத்திவிட்டு மகனுடன் பயணிக்கத் தொடங்கினார். இதனால் வீட்டு செலவுகளை அவரது தாய் பத்மா கவனிக்க வேண்டிய நிலை உருவானது. பல நாட்கள் இவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாத நிலை கூட இருந்துள்ளது. இவர்களது தியாகங்களின் பலனாக குகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு 12 வயது 17 நாட்கள்.

இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும் குகேஷின் பயணத்துக்காக சேமித்து வைத்திருந்த மொத்த தொகையையும் அவரது பெற்றோர் செலவழிக்க நேர்ந்தது.

மேற்கொண்டு நிதி தேவைப்பட்ட நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் அகாடமி வழியாக அதற்கான உதவியும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து குகேஷின் பயணம் ஏறுமுகமானது. தற்போது உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இளம் சாலஞ்சராக உருவெடுத்துள்ளார்.

பிரதமர் பாராட்டு: பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை படைத்த டி.குகேஷ் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது. குகேஷின் சாதனை அவரின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அவரது சிறந்த செயல்திறன், வெற்றியை நோக்கிய பயணம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

வைஷாலிக்கு 2-வது இடம்: மகளிருக்கான கேண்டிடேட்ஸ் தொடரில் சீனாவின் ஸோங்ஸி டான் 9 புள்ளிகளை குவித்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான கொனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, சீனாவின் டிங்ஜேய் லெய் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். கொனேரு ஹம்பி கடைசி சுற்றில் சீனாவின் டிங்ஜேய் லெயையும் ஆர். வைஷாலி, ரஷ்யாவின் கேத்ரினா லக்னோவையும் தோற்கடித்தனர்.

கேண்டிடேட்ஸ் தொடரில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-வது இடங்களை பிடித்தனர். இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார். அவர், தனது கடைசி சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபசோவை தோற்கடித்தார்.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். விதித் குஜராத்தி தனது கடைசி சுற்றில் பிரான்ஸின் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தார். ஃபிரோஸ்ஜா அலிரேசா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அபசோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

36 mins ago

தமிழகம்

52 mins ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்