‘தோனி, விராட் கோலி போன்று விளையாட முயற்சி செய்தேன்’ - ஜாஸ் பட்லர்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

224 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜாஸ் பட்லர் 60 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் விளாசிய 107 ரன்களின் உதவியால் கடைசி பந்தில் வெற்றிக் கோட்டை கடந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் தனியொரு நபராக போராடி கடைசி பந்து வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

அதிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் நடக்க முடியாத சூழ்நிலையிலும் போராடும் குணத்தை ஜாஸ் பட்லர் கைவிடாதது அனைவரையும் கவர்ந்தது. மேலும் ரோவ்மன் பாவலும் 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது.

7 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு தோல்வி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது தோல்வியை சந்தித்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

ஆட்ட நாயகன் விருது வென்ற ஜாஸ் பட்லர் கூறியதாவது: நம் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். இதுதான் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதற்கான திறவுகோலாக அமைந்தது. பேட்டிங்கின் போது தொடக்கத்தில் சிரமப்பட்டேன். இதுபோன்ற சமயங்களில் விரக்தி ஏற்படும் அல்லது நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம்.

எனக்கு நானே கூறிக்கொண்டே விஷயம் என்னவென்றால், இருக்கட்டும் தொடர்ந்து விளையாடுவோம், பேட்டிங் ஸ்ருதியை பெற்றுவிடலாம், நிதானமாக இருக்க முயற்சி செய்வோம் என்பதுதான்.

ஐபிஎல் தொடர் முழுவதுமே பலமுறை வேடிக்கையான விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. தோனி, விராட் கோலி போன்றவர்கள் கடைசி வரை களத்தில் நின்றுநம்பிக்கையுடன் விளையாடுவார்கள். நானும் அதையே செய்ய முயற்சித்தேன். எங்கள் அணியின் இயக்குநர் குமார் சங்கக்கரா எனது தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவி செய்துள்ளார். ஆட்டத்தில் எப்போதும் ஒரு திருப்புமுனை இருக்கும் என அவர், கூறுவார்.

நீங்கள் செய்யக்கூடிய மோசமான விஷயம் என்னவென்றால், போராடாமல் உங்கள் விக்கெட்டை இழப்பதுதான் எனவும், களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டும், ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் நிலைமை மாறும் எனவும் சங்கக்கரா என்னிடம் கூறியுள்ளார்.

இது கடந்த சில ஆண்டுகளாக எனது ஆட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. இதை என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸாக கருதுகிறேன். இதற்காக திருப்தியடைகிறேன். இவ்வாறு ஜாஸ் பட்லர் கூறினார்.

துரத்த முடியாத இலக்கு இல்லை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்போது, “இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. விக்கெட்கள் சரிந்த போது ஆச்சரியம் அடைந்தோம். ரோவ்மன் பவல் களமிறங்கி 2 சிக்ஸர்களை அடித்த போதுதான் ஆட்டத்தில் இருப்பதை உணர்ந்தோம். கூடவே அதிர்ஷ்டமும் எங்களுக்கு இருந்தது.

கொல்கத்தா அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களது சுழற்பந்து வீச்சு தரமானது, சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த மைதானம் அவர்களுக்கு தகுந்தவாறு உள்ளது.

ஜாஸ் பட்லர் தற்போது என்ன செய்துள்ளாரோ, அதையே கடந்த 6 முதல் 7 வருடங்களாக அணிக்காக செய்து வருகிறார். அவரது இந்த ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜாஸ் பட்லர் விளையாடத் தொடங்கினால் துரத்த முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை” என்றார்.

ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்