ஷிவம் துபேவின் மட்டை வீச்சுக்கு தோனி உதவுகிறார்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள்வித்தியாசத்தில் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிஎஸ்கேவின் பேட்டிங்கில் ஷிவம் துபே 23 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.

அதேவேளையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளில், 46 ரன்களையும் ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்களையும் சேர்த்து முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். இறுதிக்கட்ட ஓவரில் ரஷித் கானுக்கு எதிராக சமீர் ரிஸ்வி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி நிகர ரன் ரேட்டை (1.979) பலப்படுத்திக் கொண்டதுடன் 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

கடந்த சீசன்களில் ஷிவம் துபே, ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மட்டையை சுழற்றும் அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் குறைபாடாகவே மாறின. ஆனால் இந்த சீசனில் ஷிவம் துபே, ஷார்ட்பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் தொடுக்காவிட்டாலும் சிறப்பாக கையாண்டுள்ளார். இதற்காக சிஎஸ்கே அணி நிர்வாகமும், முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியும் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளனர்.

குஜராத் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறும்போது, “ஷிவம் துபே, இங்கு வந்தபோது அணி நிர்வாகம் அவருடன் தனிப்பட்ட முறையில் வேலை செய்தது, தோனியும் அவருடன் தனிப்பட்ட முறையில் பணியாற்றினார். அணியில் தனக்கான பங்கு என்ன? எந்த பந்துவீச்சாளரை தாக்க வேண்டும் என்பது ஷிவம் துபேவுக்கு தெரியும்.

இது எங்களுக்கு சாதகமான விஷயம். குஜராத் அணிக்கு எதிரான போட்டி சரியான ஆட்டத்திற்கு அருகில் இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக இதுபோன்ற செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது இருந்தது” என்றார்.

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற சிஎஸ்கே பேட்ஸ்மேன் ஷிவம் துபே கூறும்போது, “சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்ற அணிகளில் இருந்து வித்தியாசமானது. அவர்கள் எனக்கு சுதந்திரம் தருகிறார்கள். நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள், நானும் சில போட்டிகளில் வெற்றி தேடிக்கொடுக்க வேண்டும் விரும்புகிறேன்.

ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள வேண்டும் என்ற வகையிலேயே வேலை செய்கிறேன். இது எனக்கு உதவுகிறது. ஷார்ட் பிட்ச் பந்துகளை எனக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்பதை நான் அறிவேன். அதற்கு நான் தயாராக உள்ளேன். அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் ரன்கள் குவிக்க வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது. அதைத்தான் நான் செய்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

12 mins ago

தமிழகம்

20 mins ago

உலகம்

32 mins ago

சினிமா

52 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

வணிகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

மேலும்