‘இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவேன்’ - விவரம் புரியாமல் கனவு காணும் புஜாரா!

By ஆர்.முத்துக்குமார்

இந்திய அணியின் தேர்வுக் கொள்கைகள் மாறிவிட்டன. அதாவது கொள்கை என்று ஒன்று இருக்குமானால் அது மாறிவிட்டது. புஜாரா போன்றோருக்கு இனி அணியில் இடம் சாத்தியமில்லை என்பதை அவர் அறியவில்லை. அதனால், ‘என் ஆட்டம் இன்னும் மெருகேறியுள்ளது’ என்று கூறி ஸ்வீப் ஷாட்களையும் இப்போது அடிக்கடி ஆடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இப்போது சவுராஷ்ட்ரா அணிக்காக உண்மையிலேயே நல்ல இன்னிங்ஸ்களை ஆடிவரும் புஜாரா, மீண்டும் அணியில் நுழையும் வாய்ப்புப் பற்றி கனவு காண்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்த இந்திய அணியில் புஜாரா இடம்பெற்று ஆடினார். அதன் பிறகு அவர் அணியிலிருந்து தூக்கப்பட்டார். ஐபிஎல் வணிகம், பிசிசிஐ ‘வர்த்தகக் கூட்டமைப்பின்’ அணித் தேர்வுக் கொள்கைகள் மாறிவிட்டன. ஆனால் இதை இப்படியும் கூறலாம். இந்தியா எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம், வரவிருக்கும் நட்சத்திரங்கள் மீது கவனம் செலுத்தியதால் புஜாரா கைவிடப்பட்டார் என்றும் கூறிக்கொள்ளலாம்.

மேலும் இப்போது அவருக்கு வயது 36. கோலி போன்ற செலிபிரிட்டிகள், ரோஹித் சர்மா போன்ற ஐபிஎல் பேக்-அப் வீரர்களுக்கு இருக்கும் லாபி புஜாராவுக்கு கிடையாது. மேலும் இங்கிலாந்து இப்போதெல்லாம் தவறான பெயரில் அழைக்கப்படும் பாஸ்பால் என்ற அதிரடி பேட்டிங் முறையைக் கடைப்பிடித்து உலக கிரிக்கெட்டுக்கு புதிய வழி என்ற பெயரில் தவறான பாதையைக் காட்டி வரும் நிலையில், இந்த தவறான பாதை சகஜநிலையாக்கம் பெற்ற நிலையில் புஜாரா போன்றவர்களின் ஆட்ட முறை எப்படி எடுபடும்?

ஆனால் அனைத்து வீரர்களுக்கும் இருப்பது போல் புஜாராவுக்கும் கிரிக்கெட் ஆட்டத்தின் மீது அதுவும் டெஸ்ட் ஆட்டத்தின் மீது பெரிய பற்றுதலும் நேயமும் இருக்கிறது. அதனால்தான் தன்னுடைய ஆர்த்தடாக்ஸ் ஆட்டத்தில் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற புதுவகை டி20 வழிமுறைகளையும் இப்போது இணைத்துள்ளதாகக் கூறுகிறார்.

முன்னணி ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ரஞ்சி சீசனில் பிட்ச்களில் பந்துகள் கடுமையாகத் திரும்புகின்றன. இப்படிப்பட்ட டர்னர்களில் பவுலர்களை நாம் செட்டில் ஆக அனுமதிக்க முடியாது. நம்மை நாம் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக நான் ஸ்வீப் ஷாட்களுடன் ரிவர்ஸ் ஸ்வீப்களையும் ஆடிவருகிறேன். ரஞ்சி போட்டிகளில் இந்த ஷாட்களைப் பயன்படுத்தி வருகிறேன். இல்லையெனில் பவுலர்கள் நம்மை கணித்து விடுவார்கள். அதாவது ஒன்று மேலேறி வந்து ஆடுவார் இல்லையெனில் பின்னால் செல்வார் என்று எளிதில் ஊகித்துவிடுவார்கள். இந்த புதுவகை ஸ்வீப் ஷாட்களால் என் ஆட்டம் மேலும் மெருகேறியுள்ளது.

தடுப்பாட்டத்தில் நம்பிக்கையுடன் இத்தகைய ஷாட்களையும் கலந்துகட்டி ஆட வேண்டும். இந்தியாவுக்கு களமிறங்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கும். இதை விடப்பெரியது ஒன்றுமில்லை. நாட்டுக்காக வென்று கொடுப்பது, வித்தியாசத்தை ஏற்படுத்துவது பெருமை மிக்கது. எனவே எப்போது வாய்ப்புக் கொடுத்தாலும் நான் ரெடி” என்கிறார் புஜாரா.

கனவு காண்பது அவரவர் இயல்பு, உரிமை. ஆனால் நடப்பு வேறு. பிசிசிஐ, இந்திய அணித் தேர்வு, ஐபிஎல் போன்றவற்றின் தாக்கத்தினால் என்ன நடக்கிறது என்பதை ராகுல் திராவிட் - ரோஹித் சர்மாவே யூகிக்க முடியா நிலையில் புஜாரா மீண்டும் எப்படி அணிக்குள் நுழைய முடியும்?. ஆனால் புஜாரா இப்போது அவர் வளர்த்துக் கொண்டிருக்கும் அதிரடி முறையை இன்னொரு வாய்ப்பு கொடுத்து இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது ஒன்று அல்லது ஒன்றரையாண்டு அவரை ஆட வைத்து நல்ல மரியாதையுடன் அவரது பிரியாவிடையை அங்கீகரிப்பதுதான் நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

37 mins ago

வாழ்வியல்

46 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்