பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன்: சொந்த மண்ணில் பட்டம் வெல்ல ஆயத்தமாகும் சென்னை பிளிட்ஸ்

By பெ.மாரிமுத்து

சென்னை: பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன்போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ் ஆகியஅணிகளுடன் டெல்லி டூபான்ஸ் அறிமுகஅணியாக களமிறங்குகிறது.

முதல் இரு சீசன்களிலும் லீக் சுற்றை கடக்காத சென்னை பிளிட்ஸ் அணியானது இம்முறை சொந்த மண்ணில் பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.பயிற்சியாளர் தட்சிணாமூர்த்தி, கேப்டன்அகின் ஆகியோரது முன்னிலையில் கடந்த இருவாரங்களாக சென்னை பிளிட்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முறை அணியில் சர்வதேச போட்டிகள் மற்றும் உலகளாவிய லீக்கில் விளையாடி உள்ள வீரர்களுடன் இளம்வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மிடில்பிளாக்கரான அகின் ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு, ஒலிம்பிக் தகுதிசுற்று ஆகியவற்றில் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்.

யுனிவர்சல் ரோலில் விளையாடக்கூடிய இளம் வீரரான அப்துல் முக்னி சிஷ்டி 2021-ம் ஆண்டு ஜுனியர் தேசிய போட்டியிலும், கேலோ இந்தியா விளையாட்டிலும் பங்கேற்றுள்ளார். அவுட் சைடுஹிட்டர் ஸ்பைக்கராக செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த டக்ளஸ்புயேனா இடம் பெற்றுள்ளார். மற்றொரு வெளிநாட்டு வீரராக மிடில் பிளாக்கரில் சிறப்பாக செயல்படக்கூடிய ருமேனியாவைச் சேர்ந்த லியாண்ட்ரோ ஜோஸ் உள்ளார்.

அதேவேளையில் அட்டாக்கராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஹிமான்ஷுதியாகி இடம்பெற்றுள்ளார். ஹிமான்ஷு தியாகி யு-‘23 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அனைத்து இந்தியபல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் கேலோ இந்தியாவிளையாட்டிலும் தங்கம் வென்றுள்ளார். இந்திய கடற்படை, சர்வீசஸ் அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.

நட்சத்திர வீரராக அறியப்படும் ஜோபின் வர்க்கீஸ், யுனிவர்சல் ரோலில் விளையாடும் திறன் கொண்டவர். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற அவர், இந்தியன் வங்கி வீரராகவும் உள்ளார். யுனிவர்சல் ரோலில் ஹரியாணாவைச் சேர்ந்த இளம் வீரரான பராஸ் ருல்யனும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.

டெல்லியைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த செட்டரான சமீர் சவுத்ரி அணியில் மிகுந்த அனுபவம் மிக்க வீரராக திகழ்கிறார். கடந்த 2021-ம்ஆண்டு ஈரானில் நடைபெற்றயு-19 உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். பக்ரைனில் நடைபெற்ற யு-20 ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியில் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 2022-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சீனியர் ஏவிசி கோப்பை, 2023-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக போட்டியில் பங்கேற்றார். 2022-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்து இந்தியபல்கலைக்கழக போட்டி, மகாராஷ்டிராவில் நடைபெற்ற இளையோர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த ஜோயல் பெஞ்சமின் (அட்டாக்கர்), நாஞ்சில் சூர்யா (செட்டர்), பிரபாகரன், ராமநாதன் (லிபேரோ), சயந்த் (பிளாக்கர்) ஆகியோரும் சென்னை பிளிட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஜோயல்பெஞ்சமின் 3 ஆண்டுகள் தமிழக அணிக்காக விளையாடி உள்ளார். 2021-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்த சீசனில் எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து சென்னை பிளிட்ஸ் அணியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி துளசி ரெட்டி கூறும்போது, “ கடந்த இரு சீசன்களிலும் நாங்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இம்முறை சிறந்த அளவில் தயாராகி உள்ளோம். அனுபவம், இளம் திறனாளர்களை கொண்டு அணி சிறந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சீசன்களில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

சொந்த மண்ணில் விளையாட உள்ளதால் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கும். இம்முறை சூப்பர் 5 சுற்றில் நுழைவதையே முதல் இலக்காக கொண்டுள்ளோம். பின்னர் அங்கிருந்து பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி கனவை நோக்கி முன்னேற முயற்சி செய்வோம்.

இம்முறை பிளாக்கர், செட்டர் வீரர்கள் சிறப்பாக அமைந்துள்ளனர். இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான அகமதாபாத்தை சந்திக்கிறோம். இந்த ஆட்டம்சவால் நிறைந்ததாகவே இருக்கும். எப்போதுமே தொடரை வெற்றியுடன் தொடங்குவது மிகவும் முக்கியம். அந்த வகையில் சொந்த மண்ணில் வெற்றியுடன் 3-வது சீசனை தொடங்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம்” என்றார்.

சென்னை பிளிட்ஸ் அணி: அகின் ஜி.எஸ். (கேப்டன்) அப்துல் முக்னி சிஷ்டி, டக்ளஸ் புயேனோ, ஹிமான்ஷு தியாகி, ஜோபின் வர்கீஸ், லியாண்ட்ரோ ஜோஸ், நாஞ்சில் சூர்யா.எம், பராஸ் ருல்யன், பிரபாகரன்.பி, ராமன் குமார், ராமநாதன்.ஆர், சமீர் சவுத்ரி, சயந்த், ஜோயல் பெஞ்சமின்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

25 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்