இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப். 
விளையாட்டு

WI vs ENG முதல் ஒருநாள் போட்டி | 326 ரன் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது மே.இ. தீவுகள்: ஷாய் ஹோப் 109 ரன்கள் விளாசல்

செய்திப்பிரிவு

ஆன்டிகுவா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 326 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. கேப்டன் ஷாய் ஹோப் 109 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 325 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 72 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிளுடன் 71 ரன்கள் சேர்த்தார். ஸாக் கிராவ்லி 48, பில் சால்ட் 45, சாம் கரண் 38, பிரைடன் கார்ஸ் 31, வில் ஜேக்ஸ் 26 ரன்கள் சேர்த்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோதி, ஓஷேன் தாமஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 326 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்குஇந்தியத் தீவுகள் அணி 48.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது 16-வது சதத்தை விளாசிய கேப்டன் ஷாய் ஹோப் 83 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அலிக் அத்தானாஸ் 66, பிரண்டன் கிங் 35, கீசி கார்ட்டி 16, ஷிம்ரன் ஹெட்மயர் 32, ஷேர்பான் ரூதர்போர்டு 6, ரொமாரியோ ஷெப்பர்ட் 48, அல்ஸாரி ஜோசப் 2 ரன்கள் சேர்த்தனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன், ரேஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். சாம் கரண் 9.5 ஓவர்களை வீசி 98 ரன்களை தாரை வார்த்த நிலையில் ஒரு விக்கெட்கூட கைப்பற்றவில்லை. ஒருகட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்து நெருக்கடியை சந்தித்தது.

கடைசி 11 ஓவர்களில் வெற்றிக்கு 113 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஷாய் ஹோப்புடன் இணைந்து ரொமாரியோ ஷெப்பர்ட் மட்டையை சுழற்றினார். ரொமாரியோ ஷெப்பர்ட் 28 பந்துகளில் விளாசிய 48 ரன்களும், ஷாய் ஹோப்பின் சதமும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தது.

நாளை 2-வது ஆட்டம்: ஆட்ட நாயகனாக ஷாய் ஹோப் தேர்வானார். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை (6-ம் தேதி) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT