சென்னை: சீனாவில் நடைபெற்ற ஆசியபாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
சீனா நாட்டின் ஹாங்சோவில் கடந்த அக்.22 முதல் 28-ம் தேதி வரை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 18 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 7 பேர் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனர்.
பதக்கங்களைப் பெற்ற வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஊக்கத்தொகை வழங்கும்நிகழ்வு சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பதக்கங்களை வென்ற 7 பேருக்கு ரூ.3.80 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார். மேலும், இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இதர 11 பேருக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.22 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணைய உறுப்பினர் செயலர்ஜெ.மேகநாத ரெட்டி, முதன்மைநிர்வாக அலுவலர் வே.மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 7 பேருக்கும், பயிற்றுநர்களுக்கும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.