சீன பாட்மிண்டன் தொடர் கால் இறுதியில் பி.வி.சிந்து தோல்வி: 89-ம் நிலை வீராங்கனையிடம் நேர் செட்டில் வீழ்ந்தார்

சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதியில், 89-ம் நிலை வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

சீனாவின் புஸ்ஹாவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நடப்பு சாம்பியனும், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவருமான இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 89-வது இடத்தில் உள்ள 19 வயதான சீன வீராங்கனையான காவோ பாங்ஜியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் சிந்து எளிதாக வெற்றி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவோ பாங்ஜி, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் சிந்துவை நிலைகுலையச் செய்தார்.

முதல் செட்டில் தொடக்கத்தில் இருந்ததே காவோ பாங்ஜி ஆதிக்கம் செலுத்தினார். வேகமான நகர்வுகள், துல்லியமான ஷாட்கள், சரியான இடங்களில் பந்தை பிளேசிங் செய்தல் ஆகியவற்றால் காவோ பாங்ஜி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஒரு கட்டத்தில் 14-11 என முன்னிலை வகித்த அவர், அதன் பின்னர் தொடர்ச்சியாக 7 புள்ளிகளை மின்னல் வேகத்தில் சேர்த்து முதல் செட்டை 21-11 என கைப்பற்றினார்.

2-வது செட்டில் காவோ பாங்ஜியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 7-2 என அவர் முன்னிலையில் இருந்தார். இந்த நிலையில் சிந்து சற்று போராடினார். இதனால் 6-10 என நெருங்கி வந்தார். ஆனால் சிந்து மேற்கொண்டு ஒரு புள்ளி சேர்ப்பதற்குள் காவோ பாங்ஜி 16-7 என வலுவான நிலைக்குச் சென்றார். இதன் பின்னர் சிந்து தொடர்ச்சியாக 3 புள்ளிகள் சேர்த்தார். இதனால் மேலும் ஆக்ரோஷமாக விளையாடிய காவோ பாங்ஜி தொடர்ச்சியாக 5 புள்ளிகள் சேர்த்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காவோ பாங்ஜி 21-11, 21-10 என்ற நேர் செட்டில் சிந்துவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். 89-ம் நிலை வீராங்கனையான காவோ பாங்ஜியிடம், பி.வி.சிந்து வீழ்ந்தது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இத்துடன் இந்தத் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகளின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கெனவே 2-வது சுற்றுகளில் சாய்னா நெவால், பிராணாய் ஆகியோர் தோல்வி கண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE