லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 110, டிராவிஸ் ஹெட் 77, டேவிட் வார்னர் 66 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 61 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 48, பென் டக்கெட் 98, ஆலி போப் 42, ஜோ ரூட் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஹாரி புரூக் 45, பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காத நிலையில் பென் ஸ்டோக்ஸும், 68 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி புரூக்கும் மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தனர். ஜானி பேர்ஸ்டோ 16 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் நடையை கட்டினார். ஸ்டூவர்ட் பிராடு (12), ஆலி ராபின்சன் (9) ஆகியோர் டிராவிஸ் ஹெட் பந்தில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.
கடைசி வீரராக ஜோஷ் டங் 1 ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்தில் வெளியேற 76.2 ஓவர்களில்325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. அந்த அணி தனது கடைசி 6 விக்கெட்களை 47 ரன்களுக்கு தாரை வார்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க்3 விக்கெட்களையும் ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
91 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையின் போது 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள்எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 25 ரன்களில் ஜோஷ் டங் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். உஸ்மான் கவாஜா 45, மார்னஷ் லபுஷேன் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.