WTC Final நாள் 1 அலசல் | சொத்தை பவுலிங், ஊக்கமற்ற கேப்டன்சி, அஸ்வின் இல்லாத பலவீனம்!

By ஆர்.முத்துக்குமார்

ஓவல்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 76/3 என்ற நிலையிலிருந்து இந்திய அணி பிடியை நழுவ விட்டதற்குக் காரணங்கள் மூன்று. ஒன்று, உணவு இடைவேளைக்குப் பிறகு ஊக்கமற்ற சொத்தை பவுலிங் வீசியது, இரண்டாவது ரன் தடுப்பு உத்தியுடன் களவியூகம் அமைத்த ரோஹித் சர்மாவின் சிந்தனையற்ற கேப்டன்சி, மூன்றாவது பிட்சை சரிவர புரிந்து கொள்ளாமல் உலகின் நம்பர் 1 ஸ்பின்னர் அஸ்வினை உட்காரவைத்தது போன்ற தவறுகளே.

76/3 என்ற நிலையிலிருந்து ஸ்மித் (95 நாட் அவுட்), இவரை விட ஆக்ரோஷ அதிரடி பேட்டிங் செய்து ஆடிவரும் ட்ராவிஸ் ஹெட் (146 நாட் அவுட்) சேர்ந்து 60 ஓவர்களில் 251 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளனர்.

முதலில் பிட்சின் கிரீன் டாப்பை பார்த்து 4 வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்தது தவறு, அதுவும் குறிப்பாக வெளிநாடுகளில் அவ்வளவாக வாய்ப்புகளை வழங்காமல் உள்நாட்டிலேயே வாய்ப்புகளை வழங்கிய உமேஷ் யாதவ்வை கொண்டு பொய் திடீரென கிரீன் டாப் பிட்சில் போட வைத்தது. 4 வேகப்பந்து கூட்டணியை எப்போதுமே தோனி கேப்டனாக இருந்த போது விரும்ப மாட்டார், அது ஒரு ‘பேரழிவு’ முடிவு என்பார். ஏனெனில் அவர் ஸ்பின்னை நன்றாகப் பயன்படுத்தும் ஒரு கேப்டன்.

ஆனால் இப்போதோ, அதீதமாக யோசிக்கும் கேப்டன்சி படலத்தில் இருக்கிறோம், கோலியும் அஸ்வினை ஒழித்தார், இப்போது அதீத யோசிப்பு திராவிட்-ரோஹித் கூட்டணியும் அஸ்வினின் திறமைகளைக் குறைத்து மதிப்பிடுகின்றனர். உண்மையில் தங்களது பேட்டிங் வரிசை மீதான தன்னம்பிக்கையின்மையினால்தான், ஐயத்தினால்தான் பேட்டிங் ஆடக்கூடிய ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரைத்தேர்வு செய்திருக்கின்றனர். ஒரு உண்மையான வெற்றிக் கூட்டணியில் உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூருக்கு இடமில்லை மாறாக அஸ்வின், குல்தீப் யாதவ் போன்ற பிட்சை கணக்கிலெடுத்துக் கொள்ளாத திறமைகளே அவசியம்.

குல்தீப் யாதவ் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர் எந்த பிட்சிலும் போடக்கூடியவர், ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கவாஜா, ஹெட், அலெக்ஸ் கேரி ஆகியோர் இருக்கும் போது அஸ்வினை உட்காரவைப்பது முதல் தவறு என்றால், ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக அஸ்வினின் விக்கெட் வீழ்த்தும் திறமைகளையும் புள்ளி விவரங்கள் எடுத்தியம்புகின்றன.

எந்த அடிப்படையில் அஸ்வின் ட்ராப் செய்யப்படுகிறார், எந்த அடிப்படையில் நல்ல டெஸ்ட் பவுலராக கரியரைத் தொடங்கி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் விக்கெட்டுகள் எடுக்கும் குல்தீப் யாதவ் உட்கார வைக்கப்படுகிறார் போன்ற கேள்விகளை அனைவரும் பிசிசிஐ நோக்கி கேட்க வேண்டும்.

அதுவும் பிட்சைப் புரிந்து கொண்டதில் தவறையும் அஸ்வினை உட்கார வைத்த தவறையும் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட ஜாம்பவான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்பரப்பில் புற்கள் இருந்தாலும் அடியில் வறண்ட மண் தான் உள்ளது இது அஸ்வினைக் கோரும் பிட்ச் என்கின்றனர். ஆனால் ரோஹித் சர்மாதான் அதீத யோசிப்பு கேப்டனாயிற்றே, அவருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்டுள்ளனர். கடைசியில் சாத்துமுறைதான் நடந்தது.

நேற்று உண்மையில் முகமது சிராஜ், முகமது ஷமி தவிர வேறு யாரும் ஒழுங்காகப் போடவில்லை, ஜடேஜா பந்தை நன்றாகத் தூக்கி வீசி ஷார்ட் மிட் ஆன், ஷார்ட் மிட் ஆஃப் வைத்து வீசாமல் டி20-யில் வீசுவது போல் ஒரு நிமிடத்தில் விறுவிறுவென்று ஓவரை முடிப்பதில்தான் குறியாக இருக்கிறாரே தவிர நல்ல டைம் எடுத்து பீல்டிங்கை பந்துக்குப் பந்து மாற்றி எதிரணி பேட்டர்களை யோசிக்கச் செய்யவில்லை.

அதுவும் உணவு இடைவேளைக்குப் பிறகு வீசிய பந்து வீச்சு படுமோசம். ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் இருவரும் 32 ஓவர்களில் 129 ரன்கள் கொடுத்தனர், வார்னர் விக்கெட்டை வீழ்த்தியது ஷர்துல் தாக்கூரின் லக் தான். ஷமி, சிராஜின் ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தி தாமதமாக உதித்த யோசனை எனவே ட்ராவிஸ் ஹெட் இருமுறை அடிவாங்கினாலும் திரும்பவும் அடியும் கொடுத்தார்.

327/3 என்ற நிலையில் இன்று காலை முதல் ஒரு மணி நேரம் ஸ்விங் ஆகும், புதிய பந்து என்பதால் அதிகபட்சம் அட்டாக் செய்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆஸ்திரேலிய அணி கொத்தாக விக்கெட்டுகளை விடக்கூடிய அணிதான், எனவே அடுத்த 50-75 ரன்களுக்குள் மீதி விக்கெட்டுகளை வீழ்த்தினால் பயனுண்டு. இல்லையேல் ஆஸ்திரேலிய அணியின் அபார பவுலிங்குக்கு எதிராக பேட்டிங்கில் மோதிக்கொண்டிருக்க வேண்டியதுதான், பேட்டிங்கில் கடினமாக உழைக்க வேண்டியதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

7 mins ago

வாழ்வியல்

17 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

41 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்