சித்ரா பவுர்ணமி | காஞ்சிபுரத்தில் நடவாவி உற்சவம் கோலாகலம்: சிறப்பு அலங்காரத்தில் கிணற்றில் எழுந்தருளிய வரதர்

By செய்திப்பிரிவு

சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் ஐயங்கார் குளம் பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த நடவாவி கிணற்றில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மதேவர் செய்த யாகத்தில் இருந்து தோன்றியவர் வரதராஜப் பெருமாள். சித்ரா பவுர்ணமி நாளில் பிரம்மதேவர் வரதராஜப் பெருமாளை வழிபடுவதாக ஐதீகம். இதன் காரணமாகவே நடவாவி உற்சவம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. வரதராஜ பெருமாள்,கோயிலில் இருந்து நடைபயணத்தைத் தொடங்கி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, நடவாவி கிணற்றுக்குள் இருக்கும் மண்டபம் வரை நடப்பதே நடவாவி உற்சவம் ஆகும்.

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஐயங்கார் குளம் பகுதியில் சஞ்சீவிராயர் கோயில் அமைந்துள்ளது. சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள பெரிய குளத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் (14-ம் நூற்றாண்டு) நடவாவி கிணறு அமைந்துள்ளது.

‘நட’ என்றால் நடந்து வருதல்,‘வாவி’ என்றால் கிணறு. கிணற்றுக்குள் ஒரு கிணறு. தரைதளத்தில் இருந்து படிக்கட்டுகளால் சுரங்கப்பாதை செல்கிறது. அதற்குள் உள்ள மண்டபத்துக்குள் ஒரு கிணறு உள்ளது, இதுதான் நடவாவி கிணறு என்று அழைக்கப்படுகிறது. சித்ரா பவுர்ணமிக்கு இரண்டு நாட்கள் முன்பே மண்டபத்தில் நீர் தேங்காத அளவுக்கு கிணற்றில் உள்ள நீர் வெளியேற்றப்படும்.

48 மண்டலங்களைக் குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. 27-வது படி வரை கீழே இறங்க முடியும். இந்த 27 படிகள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. 27 படி ஆழத்தில் மண்டபத்தை அடைய முடியும். 12 ராசிகளைக் குறிக்கும் வகையில் 12 தூண்களால் கிணற்றைச் சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரங்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் செதுக்கப்பட்டுள்ளன.

காஞ்சி வரதராஜர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இவ்விழாவை முன்னிட்டு காஞ்சி வரதராஜப் பெருமாள் மேள தாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டு, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐயங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு அழைத்து வரப்பட்டார். சுட்டெரிக்கும் வெயிலில் வீதிகளில் நீரை தெளித்து குளிர்வித்து, கோலமிட்டு பெருமாளை பக்தர்கள் வரவேற்றனர்.

கிணற்றுக்குள் இறங்கிய வரதராஜர், உ ள் கிணற்றை மூன்று முறை வலம் வந்தார். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் நான்கு திசைகளுக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெற்றது. மொத்தம்12 முறை தீபாராதனை நடைபெற்றதும் கல்கண்டு, பழங்கள் போன்ற12 வகையான பிரசாதங்கள் பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்டன. இந்த உற்சவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பிய வரதராஜப் பெருமாளுக்கு பாலாற்றில் வைத்து பூஜை நடைபெற்றது. ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம்) எடுத்து அதற்கு பந்தல் போட்டு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர். இதைத் தொடர்ந்து செவிலிமேடு, மாவட்டஆட்சியர் அலுவலகம் பின்புறமாகவிளக்கடிக் கோயில் தெரு, காந்திரோடு வழியாக மாடவீதியை அடைந்து கோயிலை வந்தடைந்தார் வரதர்.

இதற்கிடையே சுப்பிரமணியர் கோயில் தெருவில், பெருமாளின் தசாவதாரம் என்று அழைக்கப்படும் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என 10 அவதாரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாள் செல்லும் இடங்கள் எல்லாம் திருவிழா போல் இருந்தது. வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், தாகம் தீர்க்க பானகம், மோர், நீர் அளிக்கப்பட்டது. நடவாவி உற்சவத்தை தரிசனம் செய்தால், வாழ்வில் அனைத்து நலன்களும் உண்டாகும் என்பது ஐதீகம்.

நடவாவி உற்சவத்தின் இரண்டாம் நாளில் ராமபிரான், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து, கிணற்றில் நீர்நிரப்பப்பட்டு, உள்ளூர் பக்தர்கள், கிணற்றில் நீராட அனுமதிக்கப்பட்டனர். சித்ரா பவுர்ணமி முடிந்து, 15 முதல் 20 நாள் வரை பக்தர்கள் இக்கிணற்றில் நீராடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்