அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 04: கொத்த வந்த கொக்கு அரக்கன்

By ஓவியர் பத்மவாசன்

மாயக் கண்ணன், வாசலில் இருப்பதாகவே அவனது அன்னை நினைத்துக்கொண்டிருப்பாள். பார்க்கும்போது இருக்கவும் செய்வான். அடுத்த கணம் எங்கிருப்பான் யாராலும் சொல்ல முடியாது. மரத்தில் இருப்பான், மாடுகளோடு இருப்பான், குழலூதி மயக்குவான், அனைவரையும் மயக்கி கட்டிப்போட்டு விட்டு வெண்ணெய்யை திருடி உண்டுகொண்டிருப்பான்.

கொண்டை போட்டு முத்து மணிகளால் அலங்காரம் பண்ணி இடையில் அரைஞாண் கட்டி அதிலும் ‘கிங்கிணி’ ஓசை எழுப்பும் மணிகளும் கோர்த்திருந்தாலும், இவன் ‘உஷ்’ என்றுவிட்டால் அவை ‘கப்சிப்’ என்று ஓசையற்று இருந்து விடுகின்றன. சென்ற வாரம் எழுதிய வெண்ணெய் திருடும் கண்ணன் சிற்பத்தில் இடையில் சிறிய ‘மணி’ கூட இருக்கும். கவனித்துப் பார்த்தால் தெரியும். அவையெல்லாம் அம்மா முன்னால் ஓசை எழுப்பும். அதற்கு அனுமதி உண்டு. மற்ற இடங்களில் அவை அடக்கமாக இருக்கும். அவனது போக்குவரத்தைக் கண்காணிக்கவே இவையெல்லாம்.

கம்சனும் கண்ணனும் ஆடிய விளையாட்டு

ஒவ்வொரு அரக்கனாக அனுப்புவதும் அவர்களை அழிப்பதுமாக கம்சனும், கண்ணனும் விளையாடிக் கொண்டே இருந்தனர். இங்கே நீங்கள் காண்பது கொக்கு வதம். பகாசுரன் என்ற இந்த அரக்கன் கொக்கு வடிவத்தில் வருகிறான். கூரிய அலகை வைத்துக் கொத்தப்பார்க்கிறான். இறக்கைகளை ஓங்கி அடித்துப் புழுதியைக் கிளப்பி மடக்கிப் பிடிக்க நினைக்கிறான். ஒன்றும் பலிக்கவில்லை.

போக்குக்காட்டி பின் வளைத்துப்பிடித்து, அலகைக் கிழித்துக் கொன்று முடிக்கிறான் கண்ணன். இங்கே இந்த அழகிய சிற்பத்தில் கண்ணனின் எழில் ரூபத்தில் மனது மயங்குகிறது. காலை மேலே போட்டு மடக்கிப் பிடிப்பதே ஏதோ பரத நாட்டியம் போன்று அவ்வளவு நளினமாக இருக்கிறது. சிற்பிகள் இவற்றையெல்லாம் படைக்கும்போது லட்சணங்களைத் தெளிவாகக் காட்டுவார்கள்.

கண்ணனின் லட்சணம்

கண்ணனுக்கு வெண்ணெய் உண்டு கொண்டே இருப்பதால் சிறிய தொந்தி இருக்க வேண்டும். செல்லத் தொப்பை என்பது போல் அழகாக இருக்கும். போன வாரப் படங்களிலும் பார்க்கலாம். இதிலும் பார்க்கலாம். புதிய ஓவியர்கள் வளரும் சிற்பிகள் இவற்றை கவனித்துப் பார்க்க வேண்டும். தங்கள் படைப்புகளில் காட்டவேண்டும். அப்போதுதான் அந்தந்த தெய்வங்களின் லட்சணங்கள் அவர்களில் உறைந்திருக்கும். இங்கே கண்ணன் ஜெயித்ததும் நண்பர்கள் எல்லாம் கைதூக்கி ஆரவாரம் செய்கிறார்கள்.

மேலும் ஒரு நுணுக்கத்தை அந்தச் சிற்பி இங்கே காட்டியிருக்கிறார். கொக்கின் அலகைப் பாருங்கள். கடுமை மிகுந்த கூரிய அலகு, கண்ணனின் கைப்பட்டதும் நெகிழ்ந்து வளைந்து விடுகிறது. இவர்கள் வெறும் சிற்பிகளல்ல; கடவுளைக் கண்ணால் கண்டவர்கள். அவன் கருணை மழையில் நனைந்தவர்கள். உணர்ந்தவர்கள் தானே, உள்ளதைச் சொல்ல முடியும்.

இந்த அழகிய சிற்பம் திருநெல்வேலிக்கு அருகில் திருக்குறுங்குடியில் ஸ்ரீ அழகியநம்பி திருக்கோயிலில் உள்ளது. இந்தக் கோவில் ஒரு சிற்பக் களஞ்சியம். மிகச் சிறிய அற்புதமான சிற்பங்கள் நிறைந்த திருத்தலம். ஒருமுறை இயற்கை எழில் சூழ்ந்த இந்தக் கோயிலுக்குச் சென்று, ரசித்து, மகிழ்ந்து வாருங்கள். உடலும், மனமும் நலம்பெறும்...

- அடுத்த வாரம் ராமாவதாரம்...

ஓவியர் பத்மவாசன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE