108 வைணவ திவ்ய தேச உலா - 34 | திருவாலி - திருநகரி கோயில்கள் 

By செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலி அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோயில் இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து 5 கிமீ தொலைவில் இத்தலங்கள் அமைந்துள்ளன.

குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் திருவாலி அழகிய சிங்கர் தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கயாழ்வார் பாசுரம்:

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே

பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே

தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி

ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே.

மூலவர்: அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்)

உற்சவர்: திருவாலி நகராளன்

தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)

தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: லாட்சணி புஷ்கரிணி

விமானம்: அஷ்டாட்சர விமானம்

தல வரலாறு

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தார். அப்போது அந்த சீற்றம் அடங்காமல் இருந்ததால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த கவலை கொண்டு, பூலோகம் மேலும் அழியாமல் இருக்க வேண்டும். அதைக் காக்கும் பொறுப்பை மகாலட்சுமி எடுக்க வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் வைத்தனர். அதையேற்ற மகாலட்சுமி, பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதன் காரணமாக இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று.

இப்பகுதியில் திருமங்கையாழ்வார், குறுநில மன்னராகத் திகழ்ந்து வாசம் செய்ததால், அவர் ‘ஆலிநாடன்’ என்று அழைக்கப்படுகிறார்.

பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீர நரசிம்மர், திருநகரி யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் தலங்கள் உள்ளன.

திருமங்கையாழ்வாருக்கு அருள்

திருமங்கையாழ்வாருக்கு அருள்புரிய வேண்டும் என்று லட்சுமி தேவி திருவுள்ளம் கொண்டார். அதற்காக திருமால் கூறியபடி, திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக, லட்சுமி பிறந்தார். திருமாலை திருமணம் செய்துகொண்டு வரும்போது திருவாலி அருகே தேவராஜபுரத்தில் திருமங்கைமன்னர் வழிப்பறி செய்து கொண்டிருந்தார். திருமால் அவரது காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்டார். வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம்.

திருவிழாக்கள்

வைகாசி சுவாதி திருவிழா (10 நாள்), ஆவணி பவித்ரோற்சவம், வைகுண்ட ஏகாதசி, தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷ தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். திருமங்கைமன்னன் பெருமாள் வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழாவும் பங்குனி உத்திர திருவிழாவின்போது நடைபெறுகிறது.


திருநகரி கல்யாண ரங்கநாதர் கோயில்

திருநகரி கல்யாண ரங்கநாதர் கோயிலை குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

குலசேகர ஆழ்வார் பாசுரம்:

ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே

வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே

காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே

ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ

மூலவர்: வேதராஜன்

உற்சவர்: கல்யாண ரங்கநாதர்

தாயார்: அமிர்தவல்லி

தீர்த்தம்: இலாக்‌ஷ புஷ்கரிணி

விமானம்: அஷ்டாட்சர விமானம்

தல வரலாறு

பிரம்மதேவரின் மகனான கர்த்தம பிரஜாபதி, மோட்சம் வேண்டி, பெருமாளை நோக்கி தவம் இயற்றினான். இவனுக்கு தரிசனம் தருவதில் தாமதம் ஏற்பட்டது, இதனால் வருத்தம் அடைந்த திருமகள், பெருமாளிடம் கோபித்துக் கொண்டு, குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் ஒளிந்து கொண்டார். பெருமாள் திருமகளைத் தேவி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார். திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் பெருமாள் அருள்பாலிப்பதால், இரண்டு தலங்களையும் சேர்த்து இரட்டைத் தலங்கள் (திருவாழி – திருநகரி) என்று அழைக்கப்படுகின்றன.

திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவசு மன்னராகப் பிறந்தார், இவரி புஷ்பக விமானத்தில் பறந்து வரும்போது, இத்தலத்தருகே விமானம் அப்படியே நின்றுவிட்டது. மிகவும் புண்ணியமான தலமாக இருக்க வேண்டும் என்று கருதி, திருமாலை நோக்கி மோட்சம் அருளுமாறு தவம் இருந்தார். ஆனால் வேண்டியது கிடைக்க வில்லை.

அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில், மன்னரின் மந்திரியாகப் பிறந்தார். இப்பிறவியிலும் மோட்சம் வேண்டி தவம் மேற்கொண்டபோது, கலியுகத்தில் மோட்சம் கிட்டும் என்று திருமால் அருளினார். அதன்படி கலியுகத்தில் சேனைத் தலைவரின் மகனாக நீலன் என்ற பெயரில் பிறந்தார். திருவாலியில் வசித்த குமுதவல்லியை மணம் முடிக்க எண்ணியபோது, ஓராண்டு காலத்துக்கு தினமும் 1,000 வைணவர்களுக்கு அன்னதானம் செய்தால், அவரை மணம் புரிந்து கொள்ள சம்மதம் என்று குமுதவல்லி கூறுகிறார்.

அன்னதானம் செய்து, தன்னிடம் இருந்த பொருள் அனைத்தும், தீர்ந்தபோது, மேற்கொண்டு அன்னதானம் செய்ய பொருள் வேண்டுமே என்று எண்ணிய நீலன், வழிப்பறியில் ஈடுபடலானார். அந்த சமயத்தில் திருவாலியில் பெருமாள் லட்சுமியை மணம் முடித்துவிட்டு தேவராஜபுரம் வழியே வரும்போது நீலன் வழிமறிக்க, அவருக்கு அஷ்டாட்சர மந்திரத்தை தானே உபதேசம் செய்தார் பெருமாள். இவ்வாறு திருவாழி – திருநகரி ஆகிய இரண்டு தலங்களுக்கும் ஒரே தல வரலாறு உள்ளது.

வேலுடன் திருமங்கையாழ்வார்

ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக்கவி என்று நான்கு வகையிலும் திருமங்கையாழ்வார் வல்லவராகத் திகழ்ந்ததால் அவரை ‘நாலுகவிப் பெருமாள்” என்று அனைவரும் அழைத்து வந்தனர். ஒரு சமயம் சீர்காழியில் திருஞானசம்பந்தரை திருமங்கையாழ்வார் சந்தித்தபோது, நாலுகவி குறித்து வினவிய சம்பந்தர், ஆழ்வாரின் திறமையைக் கண்டு வியந்து வேல் ஒன்றை அவருக்குப் பரிசாக அளித்தார். அதனால் இத்தலத்தில் தனிச்சந்நிதியில் வேலுடன் திருமங்கையாழ்வார் அருள்பாலிக்கிறார், இவருக்கு எதிரே ஒரு கொடிமரம் உள்ளது. பெருமாளுக்கு எதிரே ஒரு கொடிமரம் உள்ளதால், இத்தலத்தில் 2 கொடி மரங்கள் உள்ளன.

கோயில் அமைப்பும் சிறப்பும்

திருநகரி கோயிலின் ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. இக்கோயிலில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் கல்யாண ரங்கநாத பெருமாள், வேதராஜன் என்றும் அழைக்கப்படுகிறார். திருச்சுற்றில் வலப்புறம் ஆண்டாள் சந்நிதியும், இடப்புறம் தாயார் சந்நிதியும் உள்ளன, பிரகாரத்தின் பின்புறம் யோக நரசிம்மர் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

தை மாதத்தில் திருநாங்கூர் 11 திருப்பதிகளில் இருந்து பெருமாள்கள் கருட சேவையில் எழுந்தருளும்பொது, திருங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் பல்லக்கில் அமர வைத்து, திருவாழி – திருநகரி அருகே உள்ள, திருநாங்கூர் 11 திருப்பதிகளுக்கும் எழுந்தருளச் செய்து திருமங்கையாழ்வார் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடப்படும். திருவாலியில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும், இத்தலத்திலும் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

58 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்