தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவில் 7-ம் நாளான நேற்று சுவாமி சிவப்பு சார்த்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சார்த்தி எழுந்தருளினார். அப்போது சுவாமி சிவப்பு வண்ண வஸ்திரம், சிவப்பு வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து எட்டு திருவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று (24-ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுக நயினார் வெள்ளை சார்த்தி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். அப்போது, வெண்மைப் பட்டு உடுத்தி, வெண்ணிற மாலைகள் அணிந்து, பெரிய வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருவார். காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி பச்சை சார்த்தி எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. அப்போது துளசி மாலைகள் அணிந்து, பச்சைப்பட்டு உடுத்தி, பச்சை கடைசல் சப்பரத்தில், அருள்பாலிப்பார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.