திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருப்பு

By என். மகேஷ்குமார்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசனம் செய்ய 20 மணி நேரம் ஆகிறது.

கோடை விடுமுறை மற்றும் தேர்வுகளின் முடிவுகள் அறிவிப்பு பல மாநிலங்களில் வெளியான காரணத்தினால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதிலும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் பக்தர்களின் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, திருமலையில் வைகுண்டம் 1,2 ஆகிய காம்பளக்ஸ்களில் உள்ள 32 அறைகளும் நிரம்பி, வெளியே சுமார் 3 கி.மீ தொலைவிற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுவாமியை தரிசிக்க 20 மணி நேரம் ஆகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம், அன்னதான சத்திரம், சிஆர்ஓ அலுவலகம், பஸ் நிலையம் என அங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்ட நெரிசல் திருமலையில் காணப்படுகிறது.

தினமும் தற்போது சராசரியாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். ஏறக்குறைய தினமும் 1.50 லட்சம் பேருக்கு இலவசமாக அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. உண்டியல் வருமானமும் வியாழக்கிழமை ரூ. 4.44 கோடியாக இருந்தது. ஆதலால், வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் நேரம் தவறாமல் பால், குடிநீர், உணவு போன்றவை வழங்கப்படுகிறது. தேவஸ்தான ஊழியர்கள் அலட்சியம் காட்டாமல் பொறுமையுடன் பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE