காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.படம்:எம்.முத்துகணேஷ் 
ஆன்மிகம்

இரண்டாண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 13-ம்தேதி தொடங்கியது. இரண்டாண்டுகள் கழித்து இந்த பிரம்மோற்சவம் நடைபெறுவதால் முதல் நாள் விழாவில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில் ஏகாம்பரநாதர் சிறப்பு அலங்காரத்தில் ராஜ வீதிகள் உட்பட பல முக்கிய வீதிகளில் உலா வந்தார். எப்போதும் இல்லாத அளவுக்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு மக்கள் கடலாகக் காட்சி அளித்தது. பொதுமக்களும், வாகனங்களும் அதிக அளவில் குவிந்ததால் நகரம் முழுவதும் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் திருச்சி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் செவிலிமேடு வழியாக திருப்பிவிடப்பட்டன. காஞ்சிபுரம் நகரத்துக்குள் வரும் பொதுமக்கள் செவிலிமேட்டில் இறங்கி ஆட்டோ மூலமோ, அல்லது நடந்தோ காஞ்சிபுரம் சென்றனர். இதேபோல் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், சென்னையில் இருந்து வரும் வாகனங்களும் நகருக்கு 1 கிமீ.க்கு முன்பே நிறுத்தப்பட்டன.

நகரின் அனைத்து பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்குதல், உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் பக்தர்கள் பலர் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT