ஞான விளக்கு, நானிலம் கண்ட மகான், மாண்புமிகு இறைநேசர் என்றெல்லாம் போற்றப்படுபவர் சதக்கத்துல்லா அப்பா.
கீழக்கரையில் அடக்கமாகியிருக்கும் அப்பா மீது, அரசர்களும் அன்பு பாராட்டினார்கள். நபிகள் நாயகத்தின் அன்புத் தோழர், கலீஃபா- அபூபக்கர் சித்தீக் பரம்பரையில் காயல்பட்டினம் சுலைமான் வலியுல்லாவின் மூன்றாவது புதல்வராக ஹிஜ்ரி 1042-ல் (கி.பி. 1621) பிறந்தார் சதக்கத்துல்லா. தாயார் வடஇந்தியாவைச்சேர்ந்த ஒரு பிராமணக் குடும்ப வழியில் வந்தவர் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய நெறியை ஏற்றுக்கொண்டு பாத்திமா என்ற பெயருடன் வாழ்ந்துவந்த பெண்மணி அவர்.
சதக்கத்துல்லா ஒரு ஞான குருவாக அவர்களின் குடும்பத்தில் அவதரிக்கப்போகிறார் என்று நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகர் முன்கூட்டியே அறிவித்ததாகக் கூறப்படுகிறது. சதக்கத்துல்லா அவர்களின் சகோதரர்கள் அனைவருமே இறைநேசச் செல்வர்கள்.
இளைஞர் சதக்கத்துல்லா முதலில் தந்தையார் சுலைமானிடம் கல்வி கற்றார், பிறகு அதிராம்பட்டினம் சின்ன நெய்னா லெப்பையிடம் கல்விஞானம் பெற்று, காயல்பட்டினத்தில் இறை தியானத்திலும் உபதேசத்திலும் ஈடுபட்டார்.
அவுரங்கசீப்பால் பாராட்டு பெற்றவர்
சதக்கத்துல்லா அப்பாவின் இறைஞான ஆற்றலை உணர்ந்த அரசர் அவுரங்கசீப் அவருடைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளத் தலைநகருக்கு அழைத்தார். அதை சதக்கதுல்லா அப்பா மறுத்துவிட்டாலும் நட்புறவை வளர்த்துக் கொண்டார். அதன் அடையாளமாக அரபு மொழியில் ஒரு பாமாலையைப் பாடித்தந்தார். அளவற்ற மகிழ்ச்சியடைந்த அரசர் அப்பாவின் புதல்வர் முகம்மது லெப்பை ஆலிமைத் தென்னக முஸ்லிம் சமயத் தலைவராக நியமித்தார்.
நன்னீர் பெற்ற கீழக்கரை
ஒருமுறை நாகூர் நாயகர் கீழக்கரைக்கு வந்தபோது குடிப்பதற்கு உப்புத் தண்ணீரை ஊர்க்காரர்கள் தந்தார்களாம். அதைப்பருகிய நாகூர் ஆண்டகை கீழக்கரையில் ஊறும் நீர் உப்பு நீராகவே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். இதனால் பலகாலம் கீழக்கரை மக்கள் உப்புத் தண்ணீரையே பருகும் நிலை இருந்துவந்தது. ஊர் மக்களின் பிழையைப் பொறுத்து நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு அருளாசி வழங்கும்படி சதக்கத்துல்லா அப்பா அரபு மொழிப் பாமாலை மூலம் நாகூர்நாதரைக் கேட்டுக்கொண்டார். அதன் விளைவாக கீழக்கரை நல்ல நீர் கிடைக்கப் பெற்றது.
அப்பா நாகூர் நாயகரைத் தரிசிப்பதற்காக ஒரு முறை நாகூருக்குச் சென்றபோது மார்க்க நெறிமுறைக்குப் புறம்பான சில காரியங்கள் நடப்பதைப் பார்த்துவிட்டு மனம் வருந்தினார். அதனால் தர்காவுக்குள் சென்று ‘ஜியாரத்’ தரிசனம் செய்வதற்குப் பதிலாக தர்காவின் வாசலிலேயே நின்று ‘பாத்திஹா’ ஓதிச் சென்றார். அந்த இடத்தில் அப்பாவின் நினைவாக ஒரு விளக்குத் தூண் நிறுத்தப்பட்டது.
ஹஜ் பயணம்
சதக்கதுல்லா அப்பா மக்கா சென்றிருந்த போது, ஒரு நாள் மழை பெய்தது. வீதியில் நடந்துகொண்டிருந்த அப்பா மழையிலிருந்து ஒதுங்குவதற்காகச் சற்று வேகமாக வந்து ஒரு கூரைப் பக்கம் நின்றார். அவரைப் பார்த்த அரபிகளில் சிலர் கேலியாக, “ஆண்டவனின் அருளான இந்த மழை உங்கள் மீது விழுவதை விரும்பவில்யைா?” என்று கேட்டார்கள்.
“அல்லாஹ் அருள் (ரஹ்மத்) என் பாதத்தில் மிதிபடுவதை விரும்பவில்லை. அதனால் தான் ஓடி வந்து ஒதுங்கியிருக்கிறேன்” என்றார் அப்பா.
மக்கா நகர ஹரம் ஷரிப் வழிபாட்டு இடத்துக்கு அருகில் ஆசிரியர் ஒருவர், மாணவர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தார். நூலில் ஒரு இடத்தில் எழுத்துப் பிழை இருந்தது. அதனால் அந்தப் பகுதியை மாணவர்களுக்கு விளக்க முடியாமல் தவித்தார். சதக்கத்துல்லா அப்பா இதைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
தொழுகை நேரம் வரவே அனைவரும் எழுந்து தொழச் சென்று விட்டார்கள். அப்பொழுது அந்த நுாலில் பிழையாக இருந்த எழுத்தை அப்பா திருத்தி வைத்துவிட்டுத் தொழுகையில் கலந்துகொண்டார். ஆசிரியர் திரும்பி வந்து பாடத்தைத் தொடர்ந்தபோது சரியாக விரிவுரை கூற முடிந்தது.
சதக்கத்துல்லா அப்பாவே அதைச் செய்திருக்கிறார் என்பதை அறிந்த ஆசிரியர் மகிழ்ச்சியடைந்து, அவரை அழைத்து விசாரித்தார். பெயரைக் கேட்டபோது, தமது இயற்பெயர் சதக்கா என்று சொன்னார். தக்க சமயத்தில் அல்லாஹ்வே அவரை அருட்கொடையாக அனுப்பிவைத்திருப்பதாகச் சொல்லி, அந்தப் பொருள்படும்படி சதக்கத்துல்லாஹ் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.
கஸீதா என்னும் பாமாலைகள்
அரபு மொழி இலக்கண, இலக்கியங்களில் புலமைபெற்ற அப்பா பல நுால்களை இயற்றியிருக்கிறார். நாகூர் நாயகர் முதலானோரைச் சிறப்பிக்கும் கஸீதா எனும் பாமாலைகளை அரபுமொழியில் பாடியுள்ளார்.
உமறுப் புலவர், சீறாப் புராணம் காவியத்தை இயற்றுவதற்கு சதக்கத்துல்லா அப்பாவே உரை வழங்கினார். அதற்கு நன்றி பாராட்டும் பாடலும் அதில் இடம் பெற்றுள்ளது.
ஒரு பல்கலைக்கழகம் என்று சொல்லும் அளவுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட சீடர்கள் அப்பாவிடம் கல்வி ஞானம் பெற்றனர். பல சமயங்களையும் சேர்ந்த நாலாயிரத்துக்கு மேற்பட்ட பெருமக்கள் அவருடைய நல்லாசியைப் பெற்றார்கள். படிக்காசு தம்பிரான், நமச்சிவாயப் புலவர் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
சதக்கத்துல்லா அப்பா, ஒருமுறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருந்தபோது மழை பொழியச்செய்தார். காயல்பட்டினம் இரட்டைக்குளப் பள்ளியில் வானவர் மீக்காயில் அவர்களுடன் உரையாடி மழைவளத்தைக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் அவர்களைப் பலமுறை கனவில் தரிசித்தார் அப்பா. அவர் எழுதிய வித்ரியாவில் நபிமணியிடம் முறையீடு செய்யும் பகுதி இடம்பெற்றிருக்கிறது, அதன் சில வரிகள்:
“எனது உயிரோடு ஒன்றி ரத்த நாளங்களிலெல்லாம் கலந்து பரந்து நிற்கும் எனதருமை நாயகமே! ரத்த நாளங்கள் முழுவதிலும் தாங்களே நிறைந்து நிற்பதால் அவற்றில் சைத்தான் குடிபுக இடமில்லை. என்றாலும், நான் செய்துள்ள பாவங்கள் எண்ணற்றவை. இறைவன் என்னுடைய பாவங்களைப் போக்கும்வரை எனக்காகத் தாங்கள் அவனிடம் மன்றாடுங்கள். தாங்கள் அவனுடைய துாதர் மட்டுமல்ல, நேசரும் ஆவீர்கள், அவனுடைய உவப்பிற்காவே தாங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள், தங்களின் வேண்டுதல் முழுதும் அவனால் அங்கீகரிக்கப்படுவதாகும்.ஆகவே, எனக்காக மன்றாடும் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்.”
காயல்பட்டினத்தில் பிறந்து கீழக்கரையில் வாழ்ந்த பெருஞானி சதக்கத்துல்லா அப்பா ஹிஜ்ரி 1115-ஆம் ஆண்டு சபர் மாதம் ஐந்தாம் நாள் வியாழக்கிழமை இரவு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 73. அப்பாவின் தந்தையாரும் உடன்பிறந்தவர்களும் இறைநேசர்களாகத் திகழ்ந்ததைப் போன்றே, அவருடைய வழித்தோன்றல்கள் சிலரும் இறைநேசர்களாக விளங்கினர், கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கமாகியிருக்கும் சதக்கத்துல்லா அப்பாவை அன்றாடம் மக்கள் தரிசிக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
17 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
24 days ago
ஆன்மிகம்
25 days ago
ஆன்மிகம்
25 days ago