மகாளய பட்ச மகா பிரதோஷம் இன்று!  சிவ தரிசனம் செய்தால் மகா புண்ணியம்

By வி. ராம்ஜி

மகாளயபட்ச காலத்தில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்தநாளில், சிவ வழிபாடு செய்வதும் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு தரிசிப்பதும் மகா புண்ணியம் என்பதாக ஐதீகம்.

மகாளயபட்சம் என்பது முன்னோர்களுக்கான காலம். முன்னோர்களை நாம் வழிபடுவதற்கான காலம். மகாளயபட்ச காலம் எனப்படும் பதினைந்து நாட்களும் முன்னோர்களை வணங்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்கவேண்டும். அவர்களை ஆராதிக்க வேண்டும். அவர்களை நினைத்து தானங்கள் செய்யவேண்டும்.
தினமும் ஏதேனும் படையலிடவேண்டும். காகத்துக்கு உணவிட வேண்டும். நம் முன்னோர்கள் மட்டுமின்றி, இந்த உலகில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்துவிட்ட யாருக்காகவேனும் தர்ப்பணம் செய்யலாம். அவர்களை ஆராதிக்கலாம். வழிபடலாம்.

அப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மட்டுமின்றி அந்த ஆத்மாக்களும் குளிர்ந்து போவார்கள். ஆசீர்வதிப்பார்கள். அவர்களின் ஆத்மாவானது அமைதிபெறும். சாந்தி அடையும். பூரணத்துவம் பெறும் என்பதாக ஐதீகம்.

அதேபோல், ஒருவர் இறந்துவிட்டால், அவர் விஷ்ணு பதம் அடைந்துவிட்டார் என்றோ சிவபதம் அடைந்துவிட்டார் என்றோ சொல்கிறோம். மகாளயபட்ச காலத்தில் வருகிற துவாதசி, பெருமாளுக்கு உகந்த உன்னத நாளாகப் போற்றப்படுகிறது. மற்ற துவாதசியை விட சிறப்பு வாய்ந்த, நல்ல அதிர்வுகள் கொண்ட நாளாக சொல்லப்படுகிறது.
அதேபோல், மகாளய பட்ச காலத்தில் வருகிற பிரதோஷம் என்பது சிவபெருமானை வணங்கி வழிபடுவதற்கு உரிய, பிரார்த்தனை செய்வதற்கு உண்டான அற்புதமான நாள். இதை மகா பிரதோஷம் என்றும் மகாளயபட்ச பிரதோஷம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று 15ம் தேதி பிரதோஷம். மகாளய பட்ச பிரதோஷம். மகா பிரதோஷம். போதாக்குறைக்கு இன்றைய தினம் சிவராத்திரியும் இணைந்துள்ளது. எனவே மாலையில், சிவாலயம் செல்லுங்கள். சிவனாரிடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நந்திதேவரிடம் உங்கள் கோரிக்கைகளை முறையிட்டு பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கஷ்டங்களில் இருந்து விடுபடச் செய்து அருளுவார் சிவபெருமான். உங்கள் முன்னோர்களின் ஆத்மாக்களை அமைதியுறச் செய்வார் ஈசன். அவர்களை தன் திருவடிகளில் ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்வில் பல உன்னத நிகழ்வுகளை நடத்திக் கொடுத்து அருள்பாலிப்பார் தென்னாடுடைய சிவனார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE