தாய் உள்ளம் கொண்ட தட்சிணாமூர்த்தி

By ஸ்ரீவிஷ்ணு

தாய்தான் ஒவ்வொருவர் வாழ்விலும் முதல் குருவாக இருக்கிறாள். உயிர் தழைக்க உணவு முக்கியம். அந்த உணவு உணவுக் குழாய்க்கு அருகிலே உள்ள மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிடாமல் விழுங்கக் கற்றுக் கொடுத்தவள் தாய். குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே தாய் கற்றுக் கொடுத்த இந்த உத்திதான் வாழ் நாளெல்லாம் ஒருவரைக் காக்கிறது. இத்தகைய தாய் உள்ளம் கொண்டவர்தான் பக்தர்களைக் காக்கும் குரு பகவான். குரு். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருமே குருவாகவும் இருக்கிறார்கள். இதில் அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்ததால் கிருஷ்ணர் ஜகத்குரு என்று அழைக்கப்படுகிறார். இவர்கள் எல்லாம் ஸ்திர குருவானவர்கள்.

சூரியனைத் தலைவனாகக் கொண்ட நவக்கிரகங்களில் உள்ள குருவே, பெயர்ச்சி என்ற காரணம் கொண்டு பன்னிரு ராசிகளில் இடங்களைப் பெறுபவர். பொதுவாக குருப்பெயர்ச்சியன்று இவருக்குத்தான், அபிஷேக, ஆராதனை, பூஜை அர்ச்சனைகள் எல்லாம் செய்வர். தென்திக்குக் கடவுளான தட்சிணாமூர்த்தி என்பவர் இந்த குருவுக்கே குருவானவர். இப்படிப்பட்ட குரு பிரதானமாகக் காட்சி அளித்து அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களான சென்னையைச் சேர்ந்த பாடி திருவலிதாயம், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்குடித்திட்டை, மதுரை குருவித்துறை ஆகிய இடங்களின் சிறப்புக்கள் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதால் இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்து பக்தர்கள் மனம் மகிழ்கின்றனர். அந்தத் திருத்தலங்களின் தல வரலாறுகள் அற்புதம்.

திருவலிதாயம்

பரத்வாஜ முனிவர் கர்மவினை காரணமாக ஏற்ப்பட்ட சாபம் ஒன்றினால் வலியன் என்ற கருங்குருவியாகப் பிறந்தார். குருவி ரூபத்தில் இருந்த நிலை மாறி தவ யோகங்கள் செய்ய விரும்பினார். இந்த நிலையில் அந்நாளில் இவ்விடத்தில் இருந்த சிவனை தன் உருமாற வேண்டித் தவமிருந்தார். அச்சிவனுக்கு எதிரே, தன் தவவலிமையால் குளம் ஒன்றினை ஏற்படுத்தி அதில் ஸ்நானம் செய்து பின்னர் இறைவனை வழிபட்டார். இறைவன் அருளால் தவம் வென்றது. தன் உரு திரும்பப் பெற்றார் பரத்வாஜர். வலியனுக்கு அருளியதால் சிவனுக்கு இங்கு வல்லீஸ்வரர் என்பது திருநாமம். அன்னைக்கு தாயம்மை, ஜகதாம்பாள் என்று நாமகரணம்.

சிவன் குருவிக்கு அருளி யிருந்தாலும் இத்தலம் குருத்தலம் என அழைக்கப்படப் புராண காரணமும் ஒன்று உண்டு. ஒருமுறை குரு பகவான் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க இவ்விடம் வந்து வல்லீஸ்வரரை நோக்கித் தவமிருந்தார். குருவின் தோஷம் நீங்கப் பெற்றது. இத்திருத்தலத்தில் தனிச் சன்னதியும் கிட்டியது. குருவே தோஷம் நீங்கி ஒளிர்ந்ததால், திருவலிதாயம் குரு ஸ்தலமானது. ஜாதகத்தில் குரு பலம் வந்தால் திருமணம் கூடும் என்பார்கள்.

அரிய தலம் ஆலங்குடி

ஆண்டாண்டு காலமாய் குருவுக்கான பரிகார பூஜை என்றாலே அது ஆலங்குடிதான். முசுகந்தன் என்ற சோழ மன்னன் கோவில் கட்டுவதற்காகத் தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். மந்திரி மன்னன் அளித்த செல்வத்தைப் பயன்படுத்தாமல் தன்னிடம் இருந்த செல் வத்தைப் பயன்படுத்தி கோவில் கட்டுமானத்தை முடித்துவிட்டான். மன்னன், தான் முன்னர் அளித்திருந்த செல்வத்தை எடுத்துக்கொண்டு புண்ணியத்தில் பங்கு அளிக்கு மாறு கூறினான். அதற்கு மறுத்த அமுதோதகரை மன்னன் வாளால் வெட்ட முயன்றான். அப்போது அந்த ஆபத்திலிருந்து தடுத்தாண்டு சகாயம் (உதவி) செய்ததால் சிவ பெருமானுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்று பெயர்.

குருப்பெயர்ச்சி சிறப்புப் பூஜையில் குருவின் அருளைப் பெற லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கலந்து கொள்கிறார்கள்.

குருவித் துறை

வியாழ பகவான் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கித் தவம் இருந்ததால் இத்தலத்திற்கு குருவின் துறை எனப் பெயர் ஏற்பட்டது. இது பின்னாளில் மருவி குருவித் துறை ஆகிவிட்டது.

இவரது தவத்தினை மெச்சிய நாராயணன் சித்திர வேலைப்பாடுகள் அதிகம் கொண்ட ரதத்தில் தோன்றினாராம். பின்னர் குருவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மகன் கசனை மீட்டுக்கொண்டு வந்தார். குரு சந்தோஷமடைந்த தலம் என்பதால் குரு பரிகாரத் துக்கு பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதுகிறது.

இக்கோவில்கள் தவிர சிவாலயங்கள் அனைத்திலும் உள்ள குரு சன்னதிகளில் குருப்பெயர்ச்சி பூஜைகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வூர்களுக்குச் செல்ல இயலாத பக்தர்கள் அருகில் உள்ள கோவில்களில் குருவிற்கு மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் பூ ஆகியவற்றை அணிவித்து குருவருளைப் பெற்று உய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்