தமிழ் சமணத்தின் கிரீடம்

By விஜி சக்கரவர்த்தி

ஏப்ரல் 2- மகாவீர் ஜெயந்தி

ஒவ்வொரு மதத்திற்கும் தலைமையிடம் இருப்பதுபோல் தமிழ்நாட்டில் சமணத்தின் தலைமையிடம் மேல்சித்தாமூர் ஆகும்.இது திண்டிவனம்-செஞ்சி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.இவ்வூரில் ஜைனமடமும் மலைநாதர்கோயிலும் பார்சுவநாதர்கோயிலும் உள்ளன.

மலைநாதர் கோயில்

இது காலத்தால் முந்தியது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருவூராம்பள்ளி என்றும் காட்டாம்பள்ளி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் திருவறம் அருளிய ஆதிபகவன், நேமிநாதர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி உருவங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலிலுள்ள தருமதேவி சிலை எழில்கோலம் மிக்கது.

பார்சுவநாதர் கோயில்

பத்து அறங்களைக் கூறிய பகவான் பார்சுவநாதருக்கான ஆலயம் இது. கருவறையில் சிம்மபுரிநாதர் பகவான் பார்சுவநாதர், அமர்ந்து,கருநிறக்கல்லில் பளபளப்பாகக் காட்சித்தருகிறார். பரந்து விரிந்த உடலோடும் நீண்ட காதுகளும் கூரிய மூக்கும் சுருள் முடியும் கொண்டு ஆழ்தியானத்தில் காணப்படுகிறார்.

பார்சுவநாதரின் தலைக்குமேல் ஐந்துதலை பாம்பும் அதற்குமேல் முக்குடையும் உள்ளன.சிங்கமுகத்துடன் பிரபாவளியும் அதில் இருபத்திமூன்று தீர்தங்கரர்களின் சிற்பங்களும் சிறப்பாக உள்ளன. இறைவனின் இருபுறமும் சாமரம் வீசுவோர் உள்ளனர். பீடத்தின் கீழே தரணேந்திரனும் பத்மாவதிதேவியும் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். பார்சுவநாதரின் முதுகுப்புறத்தில் ஆகமங்களைக் குறிக்கும் சுருதஸ்கந்தம் வடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கருவறையில் நேமிநாதர் கம்பீரமாகக் காட்சித் தருகிறார்.இச்சிலை கி.பி.16ஆம்நூற்றாண்டாகும். சென்னை மயிலாப்பூர் கடலோர ஜைனர் கோயிலில் இச்சிலை முன்பு இருந்தது.ஆழிப்பேரலைக்குப் பயந்த சமணர்கள் சிலையை மேல்சித்தாமூருக்கு எடுத்து வந்துள்ளனர்.

தேர் வடிவ மண்டபம்

கோயிலின் மானஸ்தம்பம் 50 அடி உயர ஒரே கல்லில் கி.பி.1578ல் புஸ்செட்டி என்பவரால் உருவானது. மண்டபங்களின் தூண்கள் மண்டபங்களோடு,பல்வேறு சிற்பங்களையும் செய்திகளையும் தாங்கி நிற்கின்றன.கோயில் அருகிலுள்ள தேர்வடிவ மண்டபம்,இரு யானைகள் இழுத்துவருவது போல் அமைந்துள்ளது. இதில் அருகக்கடவுளை வைத்து பூசைகள் செய்வார்கள்.தேர்முட்டியும் உள்ளது.

ஜைனமடம்:வீரசேனாச்சாரியாரால் துவக்கப்பட்ட,பழமையான ஜைனமடம்,’ஜினகஞ்சி மடம்’ எனப்படும்.மடாதிபதி “ஸ்வஸ்திஸ்ரீ லக்ஷ்மிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள்” எனஅழைக்கப்படுவார்.இவரே சமயத் தலைவர்.அனைத்து ஜினாலய பரிபாலகர். இக்கோயிலின் மீது அப்பாண்டைநாதர் உலா, தோத்திரத்திரட்டு,ஜைனசேத்திரமாலை போன்ற நூல்களில் பாடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பங்குனியில்,பத்துநாட்கள் பெருவிழா நடைபெறும். ஏழாம்நாள் தேரோட்டம் மிகச்சிறப்பாக இருக்கும் இந்த ஆண்டின் தேரோட்டம் 1.4.2015ல் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE