இறைமை இயற்கை 05: கடலின் பேரன்பும் பெருங்கோபமும்

கடல் என்பது இன்பத்தின் அடையாளம். பரந்தாமன் இன்பத்தின் கடவுள் என்றால், அவன் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடல், இன்பத்தின் ஊற்று. கடல் என்பது கடமைகளுக்கும் உரிமைகளுக்கும் இடையில் தேங்கி நிற்கும் செயல் வடிவம். ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது கேட்டால், ‘கடல்’ போல இருக்க வேண்டும் என்றே சொல்லலாம்.

ஏனென்றால், நம்முடைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எதுவெல்லாம் பெரியதோ, அதையெல்லாம் கடலோடு ஒப்பிடுவது மனிதர்களின் பழக்கம். ஞானக்கடல், குணக்கடல், அருட்கடல், அறிவுக்கடல் என்று மனிதர்களுக்கு பெரிதாகத் தெரிவதை எல்லாம் கடல் என்கிறார்கள். உதாரணம் சொல்வதற்குக் கடலைவிடப் பெரியது உலகத்தில் உண்டு. ஆனால், கடலை உதாரணம் சொல்வதில் ஆழ்ந்த பொருள் உள்ளது.

தனி உலகம்

வள்ளுவர் பிறவியைப் பெருங்கடல் என்றார். மனிதப் பிறவி என்பது பெருங்கடலின் குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் மறைபொருள். பெருங்கடலில் நீந்திக் கரை சேர்வது மனிதர்களால் இயலாதது. ஆனால், இறைவனடி சேர்ந்தவர்கள், பிறவிப் பெருங்கடலில் நீந்திக் கரைசேர்வார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு.

கடலுக்கு அடியில் நதிகள் ஓடுகின்றன; மலைகள் நிற்கின்றன. மீன்கள், ஆமைகள், திமிங்கிலங்கள், நண்டினங்கள், புழுக்கள், அட்டைகள் என்று எண்ணற்ற உயிரினங்கள் கடல் தாயின் மடியில் உயிர் வாழ்கின்றன. ஐம்பூதங்களால் ஆன அனைத்தும் உயிரினங்கள் என்றால், கடலுக்கு அடியில் இருக்கும் பாறைகளும் மணற்குவியலும் சேற்றாறுகளும் எரிமலைகளும்கூட உயிரினங்கள்தான். கடல் என்பது ஒரு குட்டிப் பிரபஞ்சம். எனவேதான் கடல் எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது – தனது உடலால் அல்ல, மனத்தால்.

அமைதியும் சீற்றமும்

கடலைப்போல மனிதர்கள் இருக்க வேண்டும் என்றால், முதலில் கடலைப் போன்ற பரந்த மனம் மனிதர்களுக்கு இருக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருக்கும் அல்லது சாராதிருக்கும் அனைத்து உயிரினங்களின் மீதும் மனிதர்களுக்கு அன்பு வேண்டும். கடல் இயங்கிக்கொண்டே இருக்கிறது – மனிதர்களும் அப்படி இயங்கப் பிறந்தவர்களே. கடலின் ஆழ்மனதைப் போலவே மனிதர்களின் ஆழ்மனமும் அமைதியில் துயில் கொள்ள வேண்டும்.

கடலின் மனம் அமைதியாக இருக்கும்போது, மனிதர்கள் வாழும் பூமியும் அமைதியாக இருக்கிறது. மனிதச் சமூகத்தின் கூட்டுமனம் அமைதியாக இருக்கும்போது கடலும் அமைதியாக இருக்கும். ஏனென்றால், இரண்டும் வேறு வேறு அல்ல. புயலை கடல் மனதின் கோபம் என்று சொன்னால், கோபத்தை மனித மனதின் புயல் என்று சொல்ல வேண்டும். கடற் சீற்றம் என்பது பூமிக்கு நன்மை தருவதற்காகவே உருவாவது. மனிதர்களின் சீற்றமும் அறச் சீற்றமாக, நன்மை பயக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் கடல் நமக்குச் சொல்லும் செய்தி.

கடல் போன்ற மனம்

கடலின் குணம் இறைவனின் குணம். கடல் தன்னகத்தே கொண்டிருக்கும் செல்வங்களால் தன்னிறைவு கொண்டது. புறத்திலிருந்து வரும் எதையும் அது மீண்டும் கரைக்கே வீசியெறியும். தன்னிடம் கலக்கும் நதி நீரையும் அது மீண்டும் மனிதர்களுக்கு மேகம் வழியாகத் திருப்பிக் கொடுக்கிறது. கடலின் இந்த அவா அறுத்தலும் ஈகையும் மனிதர்களும் கைக்கொள்ள வேண்டிய கடமைகள்.

‘ஆண்டநீ அருள்இலை ஆனால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்’

(திருவாசகம் – வாழாப்பத்து: பாடல் 1)

என்று மாணிக்கவாசகர், இந்த உலகத்தைக் கடல் சூழ்ந்த உலகம் என்கிறார்.

‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

என்று பொய்கையாழ்வார், கடலை நெய்யாக ஊற்றி, மாலனுக்கு விளக்கேற்றுவேன் என்கிறார்.

இரண்டு ஆசான்களுமே ‘வார்கடல்’ என்ற வார்த்தையால், கடல் போன்ற மனத்தைக் கொண்டிருப்பதையே குறிப்பிடுகிறார்கள் என்று கொள்ளலாம்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை

கடலை எப்படிப் பார்க்கிறோம் என்பது பார்ப்பவர்களின் பிரச்சினை. ஆனால், கடல் எப்போதும் கடலாகவே இருக்கிறது. கடலில் கச்சா எண்ணெயைக் கொட்டுவதாலும், அணுக்கழிவுகளைக் கொட்டுவதாலும், மனிதர்களின் மிகை நுகர்வுக்குக் கடல் நீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பதாலும் கடலுக்கு ஒன்றும் இழப்பில்லை. ஒரே ஒரு சீற்றத்தால், அது தன்னைச் சீரமைத்துக் கொண்டுவிடும். வரலாற்றில் இப்படி எத்தனையோ சீற்றங்களைக் கடல் கொண்டிருக்கிறது; இந்த பூமியும் அதைக் கண்டிருக்கிறது.

எனவேதான் கடலின் தலைவனான நீர் பூதத்தை நம்முடைய சமயங்கள் போற்றிப் புகழ்ந்தன. அதனால்தான் இந்தப் பூவுலகு மட்டுமல்ல, இறைவனுக்குச் செய்யும் பூசைகளையும் நீர் இன்றி அமையாது என்று வகுத்தனர்.

‘தொழுது மாமலர் நீர்சுடர் தூபம் கொண்டு

எழுது மென்னும் இது மிகை யாதலின்’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம் - நம்மாழ்வார் திருமொழி)

என்ற பாடலில், மலரைக் கொண்டு பூசிப்பதோடு, நீரைக்கொண்டு விளக்கேற்றுவேன் என்று இறைவனிடம் சொல்கிறார். உனக்கே இது மிகையாகத் தெரிந்தாலும் நான் அப்படிச் செய்வேன் என்று சொல்லியிருப்பது இறைவனின் மீது நம்மாழ்வார்கொண்ட பேரன்பின் வெளிப்பாடு.

ஐம்பூதத் தலங்களில் நீருக்கானது திருவானைக்கா. அகிலம் ஆண்ட நாயகியின் தலைமைச் செயலகம் இது. இங்கு அவள் நீரை லிங்கமாக ஆக்கி இறைவனை வழிபட்டாள் என்பது தலவரலாறு. நதியையே முடியில் சூடியவன் இறைவன். அவனை உள்ளங்கை அளவு நீரால் உருவம் செய்து வழிபட்டது, நீரின் மீது அகிலாண்ட நாயகி கொண்டிருந்த பேரன்பின் வெளிப்பாடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்