மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவின் முதல் நாளான இன்று காலையில் கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல்

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணித் திருவிழாவின் முதல் நாளான இன்று காலையில் கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு தங்கச் சப்பரத்தில் கோயிலுக்குள் ஆவணி மூல வீதியில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். பின்னர் அங்கு கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் நடைபெற்றது.

இதில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் அலங்காரத்தில் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருவிளையாடலை கண்டு மகிழ்ந்தனர். இரவில் கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமியும், வெள்ளி சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் ஆவணி மூல வீதிகளில் எழுந்தருளுகின்றனர். இரண்டாம் நாளான நாளை நாரைக்கு முக்தி அளித்த திருவிளையாடல் நடைபெறும்.

கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் விவரம்: முற்பிறப்பில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தும், சிறிது பாவமும் செய்ததால் ஒருவன் மறு பிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து தன் நிலையை எண்ணி வருந்தியது. அப்போது மரக்கிளையின் கீழ் கூடியிருந்த சிலர் மதுரையைப் பற்றியும், பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் எனவும் பேசிக்கொண்டனர்.

அதைக்கேட்ட கருங்குருவி அங்கிருந்து மதுரைக்கு பறந்து வந்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியது. இறைவனும் குருவியின் பக்திக்கு இறங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். மேலும், கருங்குருவியின் இனத்து பெயரான எளியான் பெயரை 'வலியான்' என மாற்றினார்.

SCROLL FOR NEXT