பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இல்ல வரவேற்பறை, மிகக் குறைந்த அறைக்கலன்களைக் கொண்டிருக்கிறது; பழைய தலைமுறை அரசியல் தலைவர்களின் வீடுகள் இப்படித்தான் ஆடம்பரமில்லாமல் இருக்கும். தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம், சோஃபாவின் நடுவில் அமர்ந்தபடியே பேசுகிறார். சுவரில் சாணக்கியரும் சாவர்க்கரும் ‘ஃபிரேம்’ போட்ட படங்களிலிருந்து பார்க்கின்றனர். கௌடில்யர் என்றும் அறியப்பட்ட சாணக்கியர் தந்த அர்த்த சாஸ்திரமும் சாவர்க்கரின் இந்துத்துவ தேசியமும்தான் இவரை வழிநடத்தும் சித்தாந்தங்கள்.
இந்த இரண்டு படங்களுக்கு நடுவில் இன்னொருவர் படம் இருந்தால் பொருத்தமாக இருக்கும், ஆனால் அவர் ஒரு காங்கிரஸ் தலைவர். 1963 முதல் 1967 வரையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைத் திறமையாக வழிநடத்திச் சென்ற கு. காமராஜர் தான் அந்தத் தலைவர். அமித் ஷாவின் பாணியும் கட்சி மீது அவர் செலுத்தும் செல்வாக்கும் காமராஜரை நினைவூட்டுகின்றன.
காமராஜருக்குப் பிறகு எந்த ஒரு தேசியத் தலைவரும் இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் பெற்றதில்லை. காங்கிரஸில் பிரதமர்களாக இருந்தவர்களே கட்சித் தலைவர்களாகவும் இருந்ததை இதில் சேர்க்க முடியாது;
நரேந்திர மோடியின் எழுச்சிக்கு அமித் ஷா காரணம் அல்ல, ஆனால் ஷா வளர மோடி பெரிதும் உதவி வருகிறார். 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக தேசியத் தலைவராக அமித் ஷாவைத் தேர்வு செய்தார் மோடி. இதுவரை இந்த இருவருக்கும் இடையே முரண்பட்ட பிரச்சினை என்று எதுவுமே இல்லை.
2013-ல் அமித் ஷாவை உத்தரபிரதேச மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்தபோது, அவரால் அதிகம் சாதித்துவிட முடியாது என்றே கருதினேன். அந்த எண்ணத்திலேயே 13.7.2013-ல் கட்டுரையும் எழுதினேன். மக்களவை பொதுத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளில் 73-ல் பாஜகவும் 2-ல் தோழமைக் கட்சிகளும் வென்றன. நான்தான் புத்திசாலித்தனமில்லாமல் எதையோ அனுமானித்திருக்கிறேன் என்பது தேர்தல் முடிவுகள் வந்தபோது விளங்கியது.
அடுத்தடுத்த கட்டங்களும், என்னுடைய அனுமானங்கள் தவறு என்றே உணர்த்தின. வாஜ்பாய் பாணி அரசியலில் மேலும் ஓர் அரசை அமைக்க முயற்சிப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களோ அப்பட்டமான பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியையே நிறுவினார்கள். வாஜ்பாய் ஆட்சியில் முக்கியமான துறைகள் ஆர்எஸ்எஸ் சாராதவர்களிடம் இருந்தன.
இப்போதுள்ள அரசு கட்சிக்கோ, சித்தாந்தத்துக்கோ உண்மையாக இல்லை. அசல் சித்தாந்த உணர்வும் திறமையும் உள்ளவர்கள் அரிதாக இருப்பதால் பல துறைகளுக்குத் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை. வெளியிலிருப்பவர்களை எடுத்துக்கொள்ளவும் தலைமை தயாராக இல்லை. தூய்மையான கட்சி விசுவாசி அல்லது பல ஆண்டுகளாகக் கட்சிக்கு உழைத்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே பதவி தர கட்சி முடிவு செய்துள்ளது. இதைத்தான் ஷா கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
பாஜக/தேஜகூ அரசு முன்பிருந்ததைவிட முற்றாக வேறுபட்டுள்ளது. கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பது ஒரு காரணம். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்களாகப் பணியாற்றிய இளையவர்கள், அதே சமயம் தங்களுக்கென்று சொந்த செல்வாக்கு ஏதுமற்றவர்கள் முதலமைச்சராக்கப்பட்டனர். குஜராத்துக்கு விஜய் ரூபானி, உத்தரபிரதேசத்துக்கு யோகி ஆதித்யநாத், குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்த் என்று எல்லோருமே அமித் ஷா தேர்வுதான்.
1963 காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாடு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, பெரிய அரசியல் கொந்தளிப்பை தேசிய அளவில் ஏற்படுத்தினார் காமராஜர். கட்சிப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரைப் பின்பற்றி மத்திய அரசில் இடம் பெற்றிருந்த 6 கேபினட் அமைச்சர்களும் 5 காங்கிரஸ் முதலமைச்சர்களும் பதவி விலக நேர்ந்தது. மொரார்ஜி தேசாய், ஜகஜீவன்ராம் போன்றோரின் தலைகள் உருண்டன.
மூத்த தலைவர்கள் அரசுப் பதவிகளிலிருந்து விலகி கட்சிப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற அவருடைய யோசனை ‘காமராஜ் திட்டம்’ என்றே அழைக்கப்பட்டது. மக்களுடைய ஆதரவை காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவந்ததால் மனம் குன்றிப்போயிருந்த நேரு, காமராஜின் திட்டத்தை வரவேற்றார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கும்படி காமராஜைக் கேட்டுக்கொண்டார்.
நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு முதலில் லால் பகதூர் சாஸ்திரியையும் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியையும் பதவியேற்க வைத்து மொரார்ஜி தேசாயின் பிரதமர் பதவிக் கனவைத் தகர்த்து நொறுக்கினார் காமராஜர். 1963-67-ல் சக்திவாய்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குச் சலுகைகள், பதவிகள் கேட்டு காமராஜர் பின்னால் ஓடினர். ‘ஆகட்டும், பார்க்கலாம்’ என்ற ஒற்றை வரி பதில் மூலம் பலரையும் கட்டுப்படுத்தினார் காமராஜர். அமித் ஷாவைப் பொருத்தவரை அப்படி ஏதாவது வார்த்தை வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை; பிறவற்றில் காமராஜரைப் போலவே நடந்துகொள்கிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆளுங்கட்சியின் வலுவான தலைவரை டெல்லி பார்த்ததே இல்லை. ஷா வேறு சில முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களையும் செய்திருக்கிறார். பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கட்சி அலுவலகத்தில்தான் கூடுகிறது. பிரதமர் அங்கு வந்து கலந்து கொள்கிறார்.மத்திய அமைச்சரவையில் நடைபெறும் மாற்றம் இந்தப் புதிய நடைமுறையைத்தான் மேலும் உறுதிப்படுத்துகிறது.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரிண்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்.