ரிப்போர்ட்டர் பக்கம்

கண்ணுக்கு எதிரே நின்று செல்ஃபி எமன்!

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2016 வரை உலகம் முழுவதும் 127 பேர் செல்ஃபி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டு உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள். இதில் 76 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்தவை - டெல்லியிலுள்ள இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் அமெரிக் காவிலுள்ள கார்னிஜி மெலான் யுனிவர்சிட்டி, இணைந்து நடத்திய ஆய்வில் வெளிவந்திருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை இது!

செல்போன் பயன்படுத்துவோர் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக உச்சரித்திருக்கும் வார்த்தை அநேகமாக ‘செல்ஃபி’யாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு விழாக்கள், சுற்றுலா தலங்கள், ஏன்.. விபத்து நடக்கும் இடங்களில்கூட செல்ஃபி எடுத்து முகநூலிலும் ‘வாட்ஸ் அப்’பி லும் வலம்வரவிடுவது நம்மக்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்காகிவிட்டது.

இந்த செல்ஃபி மோகம் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. என்றாலும், செல்ஃபி எடுப்பதால் அதிகம் பாதிக்கப்படுவது, இளைஞர்களே. இவர்கள், ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் selfi_2.jpgபாம்பன் பாலத்தில் செல்ஃபி ஸ்டிக் வைத்து..

போகும்போதும் ஓடும் பேருந்திலும், ரயிலிலும், ஓடும் ரயில் முன்பும், கடலில் இறங்கியும், மலை முகடுகள் உள்ளிட்ட அபாயகரமான இடங்களிலும் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்கப்போய், பலர் தங்களது உயிரையும் இழக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுரைச் சிறுவன் ஒருவன் கொடைக்கானல் மலை உச்சியிலிருந்து செல்ஃபி எடுக்கும்போது 1000 அடி பள்ளத்தில் விழுந்து பலியானான். திண்டுக்கல்லைச் சேர்ந்த குணசேகரன் ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுக்கும் விஷப்பரீட்சையில் ஈடுபட்டு, ரயிலில் அடிபட்டு இறந்தார். கடந்த வாரம் சென்னையில், கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த திலீபன் என்ற மாணவர் ரயில் மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்தபோது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கருகிப் போனார். பிறந்தநாளும் அதுவுமாய் திலீபனுக்கு இப்படியொரு கோர முடிவை சொல்லிவிட்டுப் போனது பாழாய் போன அந்த செல்ஃபி!

இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் இந்த செல்ஃபி மோகம் குறித்து உளவியல் ஆலோசகர் பி.ராஜசவுந்திரபாண்டியனிடம் பேசினோம். “எதிலுமே நல்லதுமிருக்கும் கெட்டதுமிருக்கும் செல்ஃபி விவகாரமும் அப்படியானதுதான். செல்ஃபி எடுப்பது ஒருவிதமான மனநோய் என செய்திகள் selfi_3.jpgகடற்கரையில் உடலை புதைத்துக் கொண்டு..right

வந்தபிறகும் செல்ஃபி மோகம் குறையவில்லை. அதேசமயம், செல்ஃபி எடுப்பதும் ஒருவித மனநோய்தான் என்பது இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. என்றாலும், காலப்போக்கில், இதுவும் ஒரு மனநோய் எனச் சொல்லப்பட வாய்ப்புகள் அதிகம்.

இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது சமூக வலைதளத்தில் சின்னதாய் ஒரு ‘லைக்’ வாங்கத்தான். அதிக நேரம் தனிமையில் இருப்போரில் பெரும்பாலானவர்கள் செல்ஃபி எடுக்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் படங்களை சமூக வலைதளங்களிலும் பதிகிறார்கள். இந்தப் படங்களுக்கு மற்றவர்களின் பாராட்டோ அங்கீகாரமோ கிடைக்காத பட்சத்தில், மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

செல்ஃபியால் ஆண்களுக்கு இப்படிப் பிரச்சினை என்றால் பெண்களுக்கு வேறு மாதிரியான சிக்கலை உண்டாக்குகிறது. ‘பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஸார்டர்’ (Body Dysmorphic Disorder - BDD) என்பது மனநலம் சார்ந்த ஒரு பிரச்சினை.

இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் தங்களது உடம்பில் ஏதோ ஒரு குறை இருப்பதாக தங்களுக்குத் தாங்களே எண்ணிக்கொண்டே இருப்பார்கள்.

இன்னும் சில பெண்கள் தங்களது உடல் அழகை காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ள நிர்வாணமாக செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். பிறகு, அந்தப் படத்தை தனது காதலனுக்கோ நட்புகளுக்கோ அனுப்புவார்கள்.

சில நேரங்களில் அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரங்கமாகும்போது மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை வரைக்கும் போய்விடுகிறார்கள். இதனால், குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். செல்ஃபி மோகமானது இன்றைக்கு பல குடும்பங்களில் இப்படியான பிரச்சினைகளைத்தான் உருவாக்கிக் கொண்டி ருக்கிறது” என்கிறார் ராஜசவுந்தரபாண்டியன்.

பொதுநலன் கருதியோ அல்லது பாதுகாப்பு கருதியோ அரசு பல இடங்களில் போட்டோ எடுக்கத் தடை விதித்துள்ளது. அதுபோல சுற்றுலாத் தலங்களிலும் பிற ஆபத்தான முனைகளிலும் செல்ஃபி எடுக்கவும் தடைவிதித்து, ‘இது செல்ஃபி தடைசெய்யப்பட்ட பகுதி’ என அறிவிப்புச் செய்யவேண்டும். இதையும் மீறி ஆபத்தான பகுதிகளில் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவோரை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் செல்ஃபிக்கு எதிரான குரல்கள் வலுக்கின்றன.

எங்கிருந்தோ மிரட்டும் ‘ப்ளூ வேல்’ பயங்கரத்தைப் போல், நம் கண்ணுக்கு எதிரில் நின்று இன்னும் எத்தனை பேரை காவுவாங்கக் காத்திருக்கிறதோ இந்த செல்ஃபி எமன்!

SCROLL FOR NEXT