ரிப்போர்ட்டர் பக்கம்

இந்தியர்களின் நோய் தடுப்பு ஜீன்கள் வைரஸ் நோயை கட்டுப்படுத்தக் கூடியவை: காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பாலகிருஷ்ணன் தகவல்

என்.சன்னாசி

காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பாலகிருஷ்ணன் என மதுரை காமராசர் பல்கலைக்கழக நோய் தடுப்பாற்றல் துறைத் தலைவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டு இருக்கிறது. ஊரடங்கு ஒன்றே இதற்கான தற்போதைய தடுப்பு என்றாலும், எதிர்காலத்தில் இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆராய்ச்சிகளும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் மதுரை காமராசர் பல்கலையிலும் விரைவில் கரோனா வைரஸுக்கான மரபணு சோதனை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனை, காமராசர் பல்கலைக்கழக நோய் தடுப்பாற்றல் துறைத் தலைவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேராசிரியர் பாலகிருஷ்ணன் கூறியதாவது.

பல்கலைக்கழக அளவில் வைரஸ் ஆராய்ச்சிகள் தொடங்க வேண்டும். பல்கலைகளில் நோய் தடுப்பு மரபணு ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியர்களின் நோய் தடுப்பு ஜீன்கள் வைரஸ் நோயை மிக நன்றாக கட்டுப்படுத்தக் கூடியவை.

காமராசர் பல்கலையில் நோய் தடுப்பாற்றல்துறையில் மரபணுஆராய்ச்சி செய்கிறோம். பல்வேறு நோய்களை தடுக்கும் ஆற்றல் நம் மரபணு க்களுக்கு உள்ளது என, கண்டறிந்துள்ளோம். கரோனா நோய்க்கான மரபணுஆராய்ச்சி மேற்கொள்ள ஐசிஎம்ஆர்க்கு ஆய்வுதிட்டங்கள் அனுப்ப உள்ளோம்.

வைரஸ் ஆராய்ச்சிக்கான பிஎஸ்எல்-4 (பயோ சேப்டிலெவல்-4) ஆய்வகம் இந்தியாவில் டெல்லி, பூனா மற்றும் ஐதராபாத்தில் மட்டுமே உள்ளது. 36 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 13, பிரான்ஸ்- 4, இங்கிலாந்து- 8 உள்ளன. 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவிற்கு 5 முதல் 10 ஆய்வகம் தேவை. ஒரு ஆய்வகம் அமைக்க சுமார் ரூ.60 கோடி செலவாகும்.

இதன்மூலம் தேவையான உபகரணங்கள் இந்தியாவிலேலே தயாரிக்கலாம். கடந்த 40 ஆண்டுக்கு பிறகும் எய்ட்ஸ், எலும்புருக்கி நோய்க்கு தடுப்பு மருந்து இன்னும் தயாரிக்க முடியவில்லை. பிசிஜி தடுப்பு மருந்தும் மனிதர்களுக்கு நூறு சதவீதம் பாதுகாப்பு தரவில்லை.

புதிய எய்ட்ஸ், காச நோயாளிகளும் உருவாகின்றனர். மருந்துகள் மட்டுமின்றி வாழ்க்கை, பண்பாட்டு முறைகளே நோய்களுக்கான முழு தீர்வை தரும். நமது சரிவிகித உணவு முறை, அஞ்சரைப் பெட்டி சார்ந்த சமையல், வாழ்க்கை முறை, பண்பாட்டு, பழக்கங்கள் அனைத்தும் நமக்கு சாதகம் அளிக்கும்.

சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனா வைரஸ் தடுப்புக்கென 80க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டாலும், எந்த அளவுக்கு பலனிருக்கும் எனத் தெரியாது. மருந்துகளைவிட, தனிமனித பொது சுகாதாரம் மட்டுமே மனித குலத்தை காக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT