தமிழர்கள் வெறும் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பவர்கள் அல்லர் என்பதை கீழடி நிரூபித்துள்ளது என்று கீழடி அகழாய்வுக்காக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி கூறியுள்ளார்.
கீழடி என்கிற ஒற்றை சொல் உலகையே இந்தியாவின் தென் பகுதியை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறது. கீழடி, கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும் என்பது பலகட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு தடையின்றி நடைபெற முக்கியக் காரணமாக இருந்தவர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி.
"கீழடியில் நடைபெறவுள்ள 4-ம் கட்ட அகழாய்வுப் பணியை காலதாமதம் செய்யக்கூடாது, கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் அங்கேயே பணியமர்த்த வேண்டும், கீழடியில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும்" ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வழக்கறிஞர் கனிமொழி மதி தொடுத்த வழக்கு கீழடி அகழாய்வுக்கு ஒரு திருப்புமுனை என்றால் அது மிகையல்ல.
இந்த வழக்கில் இந்தியத் தொல்லியல் துறைக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 4-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
விளைவு, இன்று உலகின் முற்பட்ட நாகரிகங்களில் ஒன்று தமிழர்களுடையது என்பதையும், இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து பார்க்க வேண்டும் என்பதையும் கீழடி உணர்த்தியிருக்கிறது.
இந்தச் சூழலில்தான் கீழடி குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்துக்காக வழக்கறிஞர் கனிமொழி மதியைப் பேட்டி கண்டோம்.
நீங்கள் ஒரு வழக்கறிஞர். கீழடி அகழாய்வில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
நான் வழக்கறிஞராக இருந்தாலும்கூட அடிப்படையில் ஒரு வரலாற்று மாணவி. சட்டம் பயில்வதற்கு முன்னால் இளங்கலை வரலாறு பயின்றேன். அதுமட்டுமல்லாமல் எனது சொந்த ஊர் திண்டுக்கல். வழக்குகளுக்காக அடிக்கடி மதுரை வந்து செல்வது வழக்கம். அப்போதுதான் கீழடி அகழாய்வு பற்றி கேள்விப்பட்டேன். கீழடிக்கு நேரில் சென்று பார்த்தேன். பிரமித்துப் போனேன். அந்த பிரமிப்பு தந்த ஊக்கமும் வரலாற்று நேசமும் தென்மாவட்டத்தில் இருக்கும் அந்தத்தொன்மையான இடத்தை இந்த உலகமே அறிய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. கீழடி மீதான ஆர்வம் அப்படித்தான் உதயமானது.
ஆர்வம் சரி, எந்தப் புள்ளி கீழடிக்காக வழக்கு தொடரத் தூண்டியது?
கீழடி மீது நான் ஏன் முனைப்பு காட்டினேன் என்றால், தமிழகத்தில் அதற்குமுன் நடந்த எந்த ஒரு தொல்லியல் ஆய்வும் முழுமையாக நடைபெறவில்லை.
உண்மைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை . கீழடியும் அப்படி ஆகிவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்தது.
கீழடிக்கு நேரில் சென்று பார்த்தபோது, குழாய்கள் மூலம் நீரைக் கொண்டு செல்ல ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டமைப்பு, குவியல் குவியலாகக் கிடைத்த பானை ஓடுகள், கலைநயம் ததும்பிய பொருட்கள் இருந்தன. அவை எல்லாம் அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்திருக்க வேண்டும். இல்லை ஏதேனும் ஒரு தொழில் அங்கு செய்திருக்கப்பட வேண்டும் என்பதைப் பறைசாற்றுவதாக இருந்தன.
அதற்கு முன்னதாகவே தலைமையாசிரியர் பாலசுப்ரமணியம் கீழடியில் கிடைத்த பழம்பொருட்கள் பற்றி அரசுக்குத் தெரிவித்துக் கொண்டே இருந்தார்.
ஏற்கெனவே காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வு தோல்வியிலேயே முடிந்தது. தோல்வி என்றால் அகழாய்வு முறைப்படி நடத்தப்படவில்லை என்பதைச் சுட்டுகிறேன். அகழாய்வு ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதைச் சொல்கிறேன். கீழடியையும் விட்டுவிட்டால் அதுவும் அதேபோல் ஆகிவிடும். தமிழர்கள் வெறும் பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் இருந்தது.
அதனால் கீழடியை உற்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கீழடி அகழாய்வு அடுத்து நடத்தப்படாது என்ற தகவல் 2016 செப்டம்பரில் கிடைத்தது. இனி அங்கு ஆராய்சி நடத்தப்போவதில்லை. ஆவணப்படுத்துதலும் நடக்கப்போவதில்லை என்ற தகவல் வருகிறது. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வு பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் நான் அந்த வழக்கைத் தொடர்ந்தேன். கீழடி அகழாய்வைத் தொடர வேண்டும், அகழாய்வு இடங்களை மூடக்கூடாது, அவற்றை ஒரு திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றி உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் எனக் கோரினேன். எனது வழக்குக்குக் கிடைத்த வெற்றியாக அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கீழடி 4-வது அகழாய்வு குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள குறிப்பேடு பற்றி உங்களின் கருத்து?
கீழடி அகழாய்வில் மாநில அரசின் அண்மைக்கால முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. திருப்தியளிப்பதாக உள்ளது. குறிப்பேடு வெளியிடுவது போன்ற ஆவணப்படுத்துதல் நடக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது.
கீழடி அகழாய்வு ஆவணப்படுத்தியிருப்பது மற்ற அகழாய்வுகளை முடுக்கிவிடவும் ஏதுவாக இருக்கும். கடலுக்கு அடியில் புதைந்த காவிரிபூம்பட்டினத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இது ஒரு திறவுகோலாக இருக்கும். அரசாங்கத்தின் முயற்சி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் வெறும் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பவர்கள் அல்லர் என்பதை கீழடி நிரூபித்திருக்கிறது
ஒரு வரலாற்று மாணவியாக இந்திய வரலாற்றை இனி ஏன் தெற்கிலிருந்து பார்க்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
மனிதனின் யதார்த்த வாழ்க்கையைப் பற்றிய கண்டுபிடிப்புகள்தான் கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கின்றன. அங்கு கிடைக்கப் பெற்ற பொருட்கள் அந்தக் காலகட்டத்தில் இருந்த மக்கள் விளையாடி மகிழ்ந்ததையும் ஆபரணங்கள் அணிந்து மகிழ்ந்ததையும் கலைப் பொருட்களை உருவாக்கியதையும், நெசவு, கால்நடை பராமரிப்பு, வேளாண் தொழில்களில் ஈடுபட்டதையுமே உணர்த்துகின்றன. சுட்ட செங்கலால் ஆன கட்டுமானங்கள் அவர்கள் வாழ்வின் செழுமையை விளக்குகின்றன. முற்றிலும் யதார்த்த வாழ்வுக்கான அடையாளச் சின்னங்களே கிடைத்துள்ளன.
கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம். தமிழரின் சங்ககால நூட்கள் எதிலும் கற்பனைக் கதைகள் இல்லவே இல்லை. மனிதனின் யதார்த்த வாழ்க்கை முறை மட்டுமே இருந்தது. சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலைகூட வாழ்வியல் முறை பற்றிதான் இருந்தது.
அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கார்பன் டேட்டிங்கில் கி.மு.3-ம் நூற்றாண்டையும் பின்னோக்கிச் செல்கின்றன. எனவேதான் வரலாற்றைத் தெற்கிலிருந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்கிறேன்.
கீழடி மட்டுமல்ல உலகின் எந்த ஒரு மூத்த நாகரிகமாக இருந்தாலும் அது இயற்கையோடு இயைந்த நாகரிகமாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். மகிழ்ச்சியான யதார்த்தமான வாழ்க்கைமுறைதான் மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அப்படித்தான் நாகரிகம் வளர்ந்திருக்கும். அதனால் தெற்கிலிருந்து இனி வரலாற்றைப் பார்க்கும் அவசியம் உண்டாகியுள்ளது.
கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதன் அவசியம் பற்றி சொல்லுங்கள்?
இது எனது வழக்கின் ஒரு முக்கிய கோரிக்கையாகவே இருந்தது. கீழடியை ஒரு திறந்தவெளி அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும். அங்கு எடுக்கப்பட்ட பொருட்களை அங்கேயே காட்சிப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அதையேதான் இன்றும் வலியுறுத்துகிறேன். உலகின் பிற தொல் நாகரிக ஆராய்ச்சிகள் இப்படித்தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கீழடியையும் ஆவணப்படுத்த வேண்டும். அருங்காட்சியம் அமைப்பதற்கு என்றே நிபுணத்துவம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது அரசாங்கம் ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது. அது போதாது. நிபுணத்துவம் கொண்ட கட்டுமானப் பொறியாளர்கள் துணையுடன் சர்வதேச தரத்தில் அகழாய்வு இடத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இந்திய வரலாற்றை மாற்றிப் போட்டிருக்கும் இந்தக் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் முயற்சி சாதாரணமாக அமைந்துவிடக்கூடாது.
இப்படியான அகழாய்வுகள் எல்லாம் தேவையா? இதற்காக இவ்வளவு செலவா என்று எதிர்மறையாகப் பேசுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
வரலாற்றை மீட்டெடுத்தல் எதிர்கால வாழ்க்கை முறைக்கும் முக்கியமானது. அன்றைக்கு பண்பாட்டுடன் வாழ்ந்தவர்களின் வழித்தோன்றலாகியாகிய நாம் சறுக்கிவிடக் கூடாது. தற்காலச் சமூகம் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான மூலதனம் தான் வரலாற்றுத் தேடல்கள், அகழாய்வுகள். எந்த ஒரு நல்ல அரசாங்கமும் தனது மக்களுக்கு அதன் பண்டைய நாகரிகத்தை எடுத்துரைப்பதில் கவனம் செலுத்தும்.
இந்தியத் தொல்லியல் துறைக்கு நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்?
வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்களின் வரலாற்றைத் துல்லியமாக எழுதுவதில் மிக மிகக் கவனமாக இருக்கின்றன. அதே போல் இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வுகள் வரலாற்றைத் துல்லியப்படுத்த உதவுவதாக அமைய வேண்டும். அந்த வகையில் இந்தியத் தொல்லியல் துறையும் கீழடியில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியத் தொல்லியல் துறை சட்டம் 1800-களில் கட்டமைக்கப்பட்டது. அந்தச் சட்டங்களில் சைட் மியூசியத்தின் அவசியம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி கீழடியில் சைட் மியூசியம் அமைக்க உரிய நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத்தர வேண்டும்.
கீழடி அகழாய்வு மக்களைச் சென்று சேர்த்ததில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. பொதுமக்களின் கவனத்தை கீழடி பக்கம் திருப்பியதில் ஊடகங்களில் பங்கு சிறப்பானது.
இவ்வாறு வழக்கறிஞர் கனிமொழி மதி பதில் அளித்தார்.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in