யானைகளின் வருகை 5: புலி பாயும் மொட்டைப்பாறை; பலியான தாயும் மகளும்

 

கோவையின் தென் மேற்கே கேரள எல்லையில் அமைந்திருப்பது வாளையாறு. இந்த மலைக் காடுகளை ஒட்டி இருப்பது மொட்டைப்பாறை. இங்கே புள்ளிமான்கள், கடமான், சிறுத்தைகள், புலி, குள்ளக்கரடி, செந்நாய், யானைகள், நரிகள் என வனவிலங்குகளும் ஏராளம். இந்த பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் போட்ட மீட்டர் கேஜ் ரயில்பாதையில்தான் திருவனந்தபுரம், கொச்சின், பாலக்காடு, கோவை, வழியாக சென்னைக்கும் ரயில்கள் சென்றன.

இங்கே காலப்போக்கில் அகல ரயில்பாதை போடப்பட்டு, அதுவே மின்சார ரயிலும் இயங்கும் வசதியை பாலக்காடு கோட்ட ரயில்வே செய்துள்ளது. இதில் மின்சார ரயில் வருவதற்கு முன்பு காடுகளில் வனவிலங்குகள் ரயில் விபத்தில் அகப்படுவது அதிகம் நடைபெற்றதாக புள்ளிவிவரங்கள் இல்லை. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியே சென்ற நிலக்கரி ரயில் என்ஜினிற்குள் பாய்ந்த புலி ஒன்று அந்த என்ஜின் டிரைவரை தாக்கியிருக்கிறது.

கோவைக்கு செல்லும் வழியில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தில் (அந்தக் காலத்தில் இதுதான் கோவை ஜில்லாவுக்கே பெரிய ரயில்வே ஸ்டேஷன்) அந்த டிரைவர் சேர்ப்பிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தும்போனார். இவர் நினைவாக இந்த ரயில்நிலையத்திற்கு கிழபுறம் செல்லும் சாலையின் ஓரம் சுண்ணாம்பு பூசிய கற்களால் சூழப்பட்ட கல்லறை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

அந்த கல்லறையை உற்றுப் பார்த்தால் SACRED TO THE MEMORY OF JOHN WILSON ENGINE DRIVER MADRAS RAILWAY, WHO WAS KILLED AT WALAYAR BY A TIGER ON 30th APRIL 1868, AGE 29 YEARS. THIS TABLET ERECTED FELLOW WORKERS என்ற ஆங்கில வாக்கியங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கியங்கள் 149 ஆண்டுகள் முன்பே இக்காடுகளில் புலி இருந்திருக்கிறது. அது ஓடும் ரயிலில் என்ஜின் டிரைவரை நோக்கி பாயும் அளவுக்கு, அவரைத் தாக்கிக் கொல்லும் அளவுக்கு இருந்துள்ளது என்பதை வரலாற்றுப்பூர்வமாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை பலரும் பலவிதமாக இங்கே பேசுவதைக் காண முடிகிறது. அப்போதைய ரயில்கள் நிலக்கரி என்ஜின் மூலமாகவே இயங்கின. அந்த நிலக்கரியின் எரிதழல் வெளிச்சத்தை பார்த்துக் காட்டில் இருந்த புலி என்னவோ ஏதோவென்று என்ஜினுக்குள் பாய்ந்திருக்க வேண்டும். அங்கே டிரைவர் இருந்ததை கவனித்து அவரை பார்த்தவுடன் கிலியில் அடித்து விட்டு வேறு வழியே வெளியே பாய்ந்திருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மையோரிடம் உலாவும் தகவல். ஆனால் அன்றைக்கு என்ஜின் மீது பாய்ந்தது வரிப் புலி அல்ல சிறுத்தைப்புலி என்றும் ஒரு கூற்று உள்ளது.

தவிர, செத்தது டிரைவர் மட்டுமல்ல அவர் மீது பாய்ந்த புலியும்தான் என்பது இன்னொரு பேச்சு. செத்துப்போன டிரைவர், புலி இரண்டு பேருக்கும் சேர்த்துதான் இங்கே கல்லறை எழுப்பப்பட்டுள்ளது. இந்த கல்லறைக்குள் டிரைவரின் உடலுடன், புலியின் உடலும்தான் சேர்ந்து உறங்குகிறது என்பதும் கூடுதல் வதந்தி.

இது எப்படியிருந்தாலும் 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வாளையாறு காடுகளில் வனமிருகங்கள் ஏராளமாக இருந்துள்ளன. அதே பகுதியில் ஓடிய ரயிலும், காட்டுக்குள் உலாவிய புலி ஒன்று என்ஜினுக்குள் பாய்ந்து அதன் டிரைவர் சாகும் அளவுக்கு அடிக்கும் வல்லமையும் பொருந்தியதாக இருந்திருக்கிறது. அப்படியானால் அந்த ரயில் எவ்வளவு வேகத்தில் சென்றிருக்கும் (மிதிவண்டி வேகத்தில் கூட இருக்கலாம்) என்றும் சிந்தித்துப் பார்க்க முடிகிறது. (நிச்சயம் அந்த அத்துவானக் காட்டில் ரயில் சிக்னல் கிடைக்காமலோ, ரிப்பேர் ஆகியோ, யாராவது அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தோ வண்டி நின்றிருக்க வாய்ப்பில்லை என்று நம்புவோமாக).

இப்படிப்பட்ட வாளையாறு வனப்பகுதியில்தான் தற்போதெல்லாம் அடிக்கடி காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இங்கே 20 கிலோமீட்டர் ரயில்பாதை எல்லைக்குள் கடந்த 10 ஆண்டுகளில் 15 யானைகளுக்கு மேல் ரயிலில் அடிபட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள்.

அதிலும் 2007 ஆம் ஆண்டில் ஒரே ரயிலில் 3 யானைகள் அடிபட்டு இறந்ததும், அதில் ஒரு யானை நிறைமாத கர்ப்பத்துடன் இருந்ததும், அதன் வயிற்றில் இருந்த குட்டி வெளியே வந்து அதுவும் இறந்து கிடந்ததும் இப்பகுதி மக்கள் மறந்திராத சோகம். அதற்கு முன்பும் யானைகள் இறந்துள்ளன. அவை இந்த எண்ணிக்கையில் அல்ல எனினும், அவற்றின் மரணங்கள் மனித மரணத்தை விட சோகம் கப்பக்கூடியவை.

அப்படித்தான் 2000 ஆம் ஆண்டில் அந்த துயரச் சம்பவம் வாளையாறு மொட்டைப்பாறை அருகே நடந்தது. அந்த குட்டியானைக்கு அதிகமிருந்தால் நான்கு வயதிருக்கும். வயதுக்கான துறுதுறுப்புடன் துள்ளிக்குதித்து ஓடியது. காட்டுக்குள் ஓடிய ஓட்டம் அதன் நடுவே தண்டவாளங்கள் வந்தால் மட்டும் கட்டுப்படுத்திட முடியுமா என்ன? அதையும் அப்படியே கடந்தது.

அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலும் அந்தப் பாதையைக் கடக்க குட்டி கண் எதிரே சின்னாபின்னமாக, தாய்க்கு நடுங்கும் நேரமில்லை. அதுவும் ஓடிக் கொண்டிருக்கும் ரயிலுக்குள் புகுந்தது. அதுவும் மண்டை உடைந்து தூளாகி சிதைய அதன் சதைப் பிண்டங்கள் தாறுமாறாய் தண்டவாளங்களில் படிந்தது.

குட்டியின் மரணப்பிளிறலை விட தாயின் மரணஓலம் அந்த பிராந்தியத்தையே கிடுகிடுக்க வைக்க, பின்னிரவுத் தூக்கத்தை அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கும் ஊர்க்காரர்களும் இழந்தனர்.

அவர்கள் ஓடி வந்து பார்த்து அங்குள்ள ரயில்வே லைன் கேட் கீப்பருக்கு சொல்ல, கேட் கீப்பர் ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் வந்து பார்த்த பின்பு ரயில்வே மற்றும் வனத்துறையினருக்குள் சர்ச்சைகள் எழுந்தன.

'வன உயிரினங்கள் வாழும் பகுதியில் ரயில்வே லைன் அமைக்கவே கூடாது. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அதை உத்தேசித்தே மீட்டர் கேஜ் பாதையை அமைத்தது. மேலும் இந்தக் காடுகளின் இருஎல்லைகளிலும் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயிலின் வேகத்தை 30 கிலோமீட்டருக்கு அடக்கமாகவே வைத்திருந்தது. இந்த பகுதியில் ரயில்கள் செல்லும்போது தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே செல்லவேண்டும். தொலைவில் விலங்குகள் தென்பட்டால் உடனே ரயிலை நிறுத்த வேண்டும். அதேபோல் எப்படிப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆனாலும் இங்கே வேகத்தை கூட்டவே கூடாது!' என்றெல்லாம் ஏராளமான விதிமுறைகளை ஆங்கில அரசாங்கமே வகுத்து வைத்துள்ளது. அதை இப்போதுள்ளவர்கள் கடைபிடிக்காததால் வந்த வினை இப்போது இந்த தாயும், மகளும் பலியாகியிருக்கிறது!' என்றனர் வனத்துறையினர்.

ரயில்வே துறையினரோ, 'ரயில்பாதை என்று இருந்தால் அதில் ரயில் ஓடத்தான் செய்யும். அதை 40 கிலோமீட்டர் வேகத்துக்கு கீழாக செலுத்துவதும் கடினம். காட்டுக்குள் இருக்கும் யானைகளுக்கு தண்ணீர் உணவு போதுமானதாக இல்லை. அதற்கேற்ப தண்ணீர் தொட்டிகள் கட்டி தண்ணீர் விட வேண்டும். யானைகளுக்கான தீவனங்களை காடுகளுக்குள்ளேயே ஏற்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வனத்துறையினர் தம் ஊழியர்களை கூடுதலாக போட்டு அவர்கள் மூலம் யானைகளின் இடப்பெயர்வை கண்காணிக்க வேண்டும். இதுபோன்று ரயில்வே லைன் ஓரமாய் யானைகள் வருகிற மாதிரி தெரிந்தால் அவற்றை வேறு திசையில் விரட்டி விட வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் எங்கள் மேல் பழிபோடுகிறார்கள்!' என்று பதிலுக்கு காட்டம் காட்டினர்.

இங்குள்ள மக்களோ தாய்ப்பாசத்துடன், மனிதகுலத்திற்கே உண்டான நேசத்துடன் பேசினர். எப்படி? இங்குள்ள முன்னாள் ராணுவத்தினர் நெகிழ்ச்சி ததும்ப இப்படி பேசினார். ''வடமாநிலத்தில் எல்லம் இதுபோன்ற காடுகளுக்கு நடுவே ரயில்வே லைன் போடப்படும்போது சில விஷயங்கள் கணக்கெடுத்தே செய்கிறார்கள். ரயில்வே தண்டவாளங்கள் கொஞ்சம் தூக்கலாக அமைக்கப்படும். அதன் அடியில் தொலை தூரத்தில் ரயில் வரும்போதே பெரும் சப்தம் எழுப்புவது போல் சில அமைப்புகள் அதற்குள்ளேயே ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இங்கே அதில் ஒரு அம்சம் கூட பின்பற்றப்படவேயில்லை!'' என்றார்.

இந்த விஷயங்களை பற்றி வனத்துறையினரோ, ரயில்வே துறையினரோ இப்படியொரு சோகம் நடந்த பிறகும் கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. தங்கள் தரப்பில் நியாயம் கற்பிப்பதிலேயே குறியாக இருந்தனர். அப்போதைய வனத்துறை அதிகாரி ஒருவர் பேசும்போது,

''இது இந்தப் பகுதியில் நடக்கும் முதல் சோகம். யானைகளுக்கு பொதுவாகவே பிள்ளைப்பாசம் அதிகம். அது தன் குழந்தையை இருபத்தியிரண்டு மாசம் வயிற்றில் சுமக்கிறதே. இதுபோன்ற ரயில்பாதை உள்ள இடங்களில் ஒரு குட்டி யானை மாட்டிக் கொண்டால் போச்சு. உடனடியாக அதைக் காப்பாற்ற களத்தில் இறங்கி விடும். அதுவும் உடனே அடிபட்டு செத்து விடும். இது வடக்கு மாநிலங்களில் அடிக்கடி நிகழும் விபத்து. இங்கே இப்போதுதான் நடந்துள்ளது. இருந்தாலும் இப்பகுதியில் மட்டும் ரயிலின் வேகத்தை குறைக்கலாம்தான். அதை பாலக்காடு வனத்துறை அதிகாரிகள் ரயில்வே அதிகாரிகளிடம் கோரியிருப்பதாக சொல்கிறார்கள். அப்படி செய்தார்களானால் தமிழகப் பகுதியில் ஓடும் ரயில்வே லைன்களிலும் கடக்கும் யானைகள் காப்பாற்றப்படும்!'' என்று குறிப்பிட்டார். சரி, அதை ரயில்வே அதிகாரிகள் கடைப்பிடித்தார்களா? அதுதான் இல்லை.

- மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE