அபு துஜானா.. காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி. தெற்கு காஷ்மீரின் கமாண்டர். 20 வயது முதலே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர். எப்போதும் ஜீன்ஸ், டி-ஷர்ட்டுடன் ஸ்டைலாக இருக்கும் துஜானாவை ராணுவமும் காஷ்மீர் போலீஸாரும் இணைந்து 8 மணி நேரம் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். துஜானாவின் செயல்பாடுகளும் அவரை எப்படி கண்ணிவைத்து போலீஸார் வளைத்தனர் என்பது சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யம்.
சமீபகாலமாக, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளின் நடமாட்டம் காஷ்மீரில் அதிகரித்துள்ளது. வறுமையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த வேலை கிடைக்காத இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறுகின்றனர். பலர் பணம், புகழுக்காக தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்தாலும், அதையும் தாண்டி காஷ்மீர் இளம் பெண்களின் மீதுள்ள கவர்ச்சியாலும் பலர் தீவிரவாதிகளாக மாறுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எந்நேரமும் கையில் ஏகே 47 துப்பாக்கியும் அலட்சியப் பார்வையுமாக சினிமாவில் வரும் ஆன்டி ஹீரோக்களைப் போல திரியும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை காஷ்மீர் இளம் பெண்கள் பிரமிப்பாக பார்க்கின்றனர். அப்பாவி பொது மக்களின் பயமும் மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையும் அவர்கள் ஹீரோ போல் வலம் வர உதவுகிறது. வங்கிகளில் கொள்ளையடித்த பணத்திலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தரும் பணத்திலும் விலை உயர்ந்த செல்போன், ஆடைகள், கார்கள் என பணக்காரத் தோற்றத்தில் இருக்கிறார்கள் தீவிரவாதிகள். காஷ்மீரில் தொடர் தீவிரவாதத்தால் நலிந்து போயிருக்கும் குடும்பத்தினருக்கு பணத்தை அள்ளி வீசும் இவர்களின் காதல் வலையில் விழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழிக்கு வராதவர்களை மிரட்டியும் காரியம் சாதிக்கின்றனர் தீவிரவாதிகள்.
பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான தீவிரவாதி துஜானா வுக்கு பல மனைவிகள், காதலிகள். இவரின் செல்போனை போலீஸார் கண் காணிப்பது தெரிந்தும், அதைப்பற்றி எல் லாம் கவலைப்படாமல் காதல் வாழ்க்கை வாழ்ந்தவர். இதுபற்றி அறிந்த பாகிஸ் தானின் ஐஎஸ்ஐயும், லஷ்கர் அமைப்பும் எச்சரிக்கை செய்துள்ளன. அதன்பிறகு, போன் எண்களை மாற்றியிருக்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு தெற்கு காஷ்மீ ரின் லஷ்கர் கமாண்டராக இருந்த அபு காஸிம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட் டதை அடுத்து, துஜானா அந்தப் பதவிக்கு வந்தார். பாதுகாப்பு படையினரின் வாகனங்களைக் குறிவை த்து திட்டமிட்டு தாக்குவதிலும் வங்கிகள், ஏடிஎம்களில் கொள்ளையடிப்பதிலும் கில்லாடி.
உதாம்பூர், பாம்போர் தீவிரவாத தாக்குதலை நடத்தியவர் இவர். கடந்த ஓராண்டாகவே இவரைப் பிடிக்க போலீஸார் கண்காணித்து வந்தனர். இவரின் தலைக்கு ரூ.15 லட்சம் விலை வைக்கப்பட்டிருந்தது. பலமுறை கடைசி நேரத்தில் போலீஸார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தனது செல்போனை வேறு யாரிடமாவது கொடுத்து பயன்படுத்திக் கொள்ளும்படி கூறிவிட்டு, இவர் வேறு இடங்களுக்கு சென்று விடுவார். செல்போனை கண்காணிக்கும் போலீஸாரை ஏமாற்ற இப்படி பல வழிகளைக் கையாள்வார்.
புல்வாமா மாவட்டத்தின் ஹக்ரிபோரா பகுதியில் துஜானாவின் மனைவிகளில் ஒருவரான ருக்கியா தங்கியிருந்தார். இவரை சந்திக்க துஜானா வரப் போவதாக ரகசியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதிகாலை 4.45 மணி முதல் ருக்கியாவின் வீட்டை போலீஸார் கண்காணித்து வந்தனர். ஆனால், அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்று விட்டார் துஜானா. அவருடன் அரீப் லிலாரி என்ற மற்றொரு தீவிரவாதியும் இருந்தார். அந்த வீட்டை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், சரணடையும்படி கூறினர். காலை 8 மணி வரையும் அமைதியாக இருந்த தீவிரவாதி கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அதன் பிறகே, வீட்டை வெடிகுண்டு வீசி பாதுகாப்பு படையினர் தகர்த்தனர். இதில் தீவிரவாதிகள் இருவரும் உயிரிழந்தனர்.
துஜானாவுக்கு பல காதலிகள். விரும்பி வந்தவர்கள் சிலர்தான். மிரட்டி பணிய வைத்தது பலரை. இதனால் துஜானா மரணத்தால் அந்தப் பகுதியில் உள்ள பலருக்கு இப்போதுதான் நிம்மதி என்கிறார் போலீஸ் அதிகாரி முனீர் கான்.
பெண்களால் பலியான தீவிரவாதிகள்
துஜானாவைப் போல் இதற்கு முன்பும் பல தீவிரவாதிகள் பெண்களால் உயிரிழந்துள்ளனர். காதலிகளையும் மனைவிகளையும் அவர்களால் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. பல நேரங்களில் பாதிக்கப்பட்ட காதலிகளே போலீஸாருக்கு உளவு சொல்வதும் நடந்திருக்கிறது.
சோப்பூரில் இருந்த லஷ்கர் தீவிரவாதி அப்துல்லா யுனி கடந்த 2012-ல் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருக்கு நாலைந்து காதலிகள். இதன் காரணமாகவே தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய அப்துல்லா, அடிக்கடி பொது இடங்களில் நடமாடத் தொடங்கினார். போலீஸார் இவரைத் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தனர். ஒருநாள் காதலிகளில் ஒருவரே இவரைக் காட்டிக் கொடுத்தார். நள்ளிரவில் வீடு தேடி வந்த காதலனைப் பற்றி போலீஸாரிடம் போட்டுக் கொடுத்தார். வீட்டை சுற்றி வளைத்த போலீஸார் அப்துல்லாவை சுட்டுக் கொன்றனர்.
நகரில் கடந்த 1999-ம் ஆண்டு அபு டால்ஹா என்ற லஷ்கர் தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இவனுடைய அழிவுக்கு காரணமும் காதல் மயக்கம் தான். காஷ்மீர் அரசின் பொதுப் பணித் துறையில் தலைமை பொறியாளராக இருந்த ஒருவரின் மகள் மீது அபுவுக்கு ஆசை. ஆனால், ஏரியாவில் செல்வாக்கான தந்தைக்கு அதில் விருப்பமில்லை. மகளை தொலைவில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். கடுப்பாகிப் போன அபு, ஓவர் மேக்கப்புடன் திரிகிறார் அந்தப் பெண் என பழி சுமத்தி அவர் மீது பத்வா பிறப்பிக்க ஏற்பாடு செய்தார். அப்படியும் அந்தப் பெண் சம்மதிக்காததால், குடும்பத்தையே கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறார் அபு.
பெண்ணின் தந்தைக்கு தீவிரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் உறவினர். அவரிடம் இந்தப் பிரச்சினையை அவர் கொண்டு சென்றார். அவர் மத்திய உளவுப் பிரிவான ஐ.பி.க்கு தகவல் தர, அபுவுக்கு வலை விரிக்கப்பட்டது. அபுவின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. அவரின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டது. இந்நிலையில், ஷிவ்போரா பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த வீட்டை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் அபுவை சுட்டுக் கொன்றனர்.