வா
லிபாலில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் தூத்துக்குடி தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த எம்.மைக்கிள் நந்தினி (16). இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு படிக்கிறார்.
தமிழக சப் ஜூனியர் மகளிர் அணியில் இடம்பெற்று ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கி, வெள்ளிப் பதக்கம் பெற காரணமாக இருந்தவர். இதற்காகவே இவர் மீது நம்பிக்கை வெளிச்சம் பாயத்தொடங்கியுள்ளது.
சாதாரண மீன் தொழிலாளி குடும்பம். தந்தையும் சகோதாரனும் உழைத்து கிடைக்கும் தினக்கூலியில், அன்றாடம் உலை வைக்கவே போதாத வருமானம். இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் களமிறங்கி பரிசுகளை குவிக்க வேண்டும் என்கிற இவரது லட்சியம், குடும்பத்தின் வறுமைக் கோட்டைத் தாண்டி எட்ட வேண்டும் என்பதுதான் அவர் முன் நிற்கும் சவால்.
6-ம் வகுப்பு படிக்கும்போதே வாலிபால் விளையாட்டு மீது ஏற்பட்ட ஆர்வம், பல நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தது. 168 செமீ உயரம் அவருக்கு பிளஸ் பாய்ண்டாக அமைந்தது. கடுமையான உழைப்பால், மாவட்ட அளவிலும் மாநில அளவிலுமான போட்டிகளில் பங்கேற்க முடிந்தது. தமிழக சப் ஜூனியர் மகளிர் அணியில் இடம்பெற்றார். இந்த அணி ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பியது.
நந்தினி கூறும்போது, “சீனியர் வீராங்கனைகள் விளையாடும் போட்டிகளை பார்க்கும்போதும் மற்ற வாலிபால் போட்டிகளை பார்க்கும்போதும் எவ்வாறு ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளும் புள்ளிகளை சேர்க்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கிறேன். நான் மைதானத்தில் களமிறங்கும் போதெல்லாம் அந்த நுணுக்கங்களை கையாண்டு பந்தை லாவகமாக கையாள்கிறேன்” என்கிறார் உற்சாகம் குறையாமல்.
இவரது பயிற்சியாளரும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருமான எஸ்.ஆன்றனி ரவிகாந்த் கூறும்போது, “வாலிபால் வீராங்கனை நந்தினியை ஊக்குவிக்கவும் உதவிகள் செய்யவும் அரசும் தனியாரும் முன்வந்தால் இந்தியாவுக்கு தலை சிறந்த வாலிபால் வீராங்கனை கிடைப்பார்” என்கிறார் உறுதியுடன்.
வாலிபால் போட்டியில் மட்டுமின்றி தடகளத்தில் 100, 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போன்ற தடகளபோட்டிகளிலும் சாதனை படைக்கிறார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் நடந்த போட்டிகளிலும் அவர் ஜொலிக்கத் தவறவில்லை. நந்தினியை மட்டுமல்ல பலரையும் வளர்த்திருக்கிறது, தருவைக்குளம் கிராமத்தில் உள்ள செயின்ட் மைக்கிள்ஸ் வாலிபால் கிளப். தேசிய அள வில் சிறந்து விளங்கும் வீரர்கள் பல ரும் இன்றும் ஊக்கம் அளிக்கின்றனர்.
நந்தினி எகிறி அடிக்கும் பந்து வறுமைக் கோட்டைத் தாண்ட வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.