நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் அதிர்ச்சிகரமான முடிவுகளை தந்துள்ளன. அடுத்த மக்களவை தேர்தலுக்கு 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக ‘மினி பொதுத்தேர்தலாக’ இது வர்ணிக்கப்பட்டது.
அதற்கு சில காரணங்கள் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று திரண்டு வருகின்றன. தங்கள் சுய பலத்தை பரிசோதித்து பார்க்கும் தேர்தலாக எதிர்கட்சிகள் இந்த இடைத்தேர்தலை கருதின.
பல அரசியல் பார்வையாளர்களின் கருத்துக்கு ஏற்ப எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளே வெளியாகியுள்ளன. எதிர்கட்சிகளின் கூட்டணி உ.பி.யை தாண்டி மகாராஷ்டிரா, பீகார் என பல மாநிலங்களிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. மக்களவை இடங்களில் நான்கில் இரண்டை பாஜக பறி கொடுத்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.
அதுவும் உ.பி.யின் கைரானாவும், மகாராஷ்டிராவின் பண்டாரா, கோண்டியா தோல்வியும் பாஜகவை ரொம்பவே உலுக்குகிறது. இந்த இரு தொகுதிகளிலும் பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தன. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் எதிர் அணிக்கு ஆதரவு கரம் நீட்டியது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இந்த கட்சிகள் நிருபித்துள்ளன.
காங்கிரஸ் - இந்திரா காந்தி
இந்தியாவில் தற்போது எழுந்துள்ள சூழ்நிலையை, 1970-காலகட்டத்தில் இருந்த நிலையுடன் அரசியல் பார்வையாளர்கள் பலரும் ஒப்பிடுகின்றனர்.
அப்போது காங்கிரஸூக்கு எதிராக, அப்போதைய பிரதமர் இந்திராவின் செயல்பாட்டிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்தன. சோசலிச கொள்கையில் ஊறியவர்களும், பாஜகவின் தாய் கட்சியான பாரதிய ஜனசங்கத்து தலைவர்களும் கூட கைகோர்த்தனர். வெவ்வேறு கொள்கைகள் இருந்தபோதிலும், அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒன்று கூடினர்.
அவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த இலக்கு என்பது ஒன்று தான். காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும்; இந்திராவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். ஜனதா என்ற ஒற்றை மந்திரம் அப்போது காங்கிரஸூக்கும், இந்திரா காந்திக்கும் எதிராக அனைத்து கட்சிகளையும் ஒரணியில் சேர்த்தது.
ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற முழக்கத்துடன் ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய இயக்கமும், ஜனதாவின் அரசியலுக்கு உரம் ஏற்றியது. இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக்கு எதிராக நாடுமுழுவதும் கிளர்ச்சிகள் நடந்தன. இந்த அரசியல் போராட்டம் இறுதியில் காங்கிரஸை வீழ்த்தியது.இந்திராவை பதவியில் இருந்து இறக்கியது. ஜனதா ஆட்சி மலர்ந்தது.
1977-ம் ஆண்டு நடந்த இந்த தேர்தல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது; இந்திய வரலாற்றில் முதன்முறையாக காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. ஜனதா அணி 544 இடங்களில், 298 தொகுதிகளில் வென்று சரித்திர சாதனை படைத்தது.
திரும்பும் வரலாறு
இந்த வரலாறு மீண்டும் திரும்புவதாக சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பாஜகவில் பிரதமர் மோடியின் நிலை, அன்றைய காங்கிரஸில் இந்திரா காந்தி இருந்ததற்கு நிகரானது. பாஜகவின் தனிப்பெரும் தலைமையாக பிரதமர் மோடியின் உருவானதால் எதேச்சதிகாரம் தலை தூக்கி வருவதாக பலரும் கூறுகின்றனர். மோடியே, பாஜக என்றாகி விட்ட பிறகு நிலைமை மாறி விட்டது.
பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் பலர் தற்போது அந்த கட்சியில் இல்லை. அல்லது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டனர்; அல்லது ஒதுக்கப்பட்டு விட்டனர். பாஜகவின் தீவிர கொள்கை போராளியான சிவசேனா கூட இன்று பிரதமர் மோடியின் தீவிர எதிராளியாகி விட்டது. எதிர்கட்சி வரிசையில் உள்ள அனைத்து தலைவர்களுமே பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு தயாராகி விட்டனர்.
மோடி எதிர்ப்பு அலை
எனவே பாஜகவுக்கு எதிரான அலையை உருவாக்குவதில் எதிர்கட்சிகள் வென்று வருவதாக கூறப்படுகிறது. அதனை தற்போதைய இடைத்தேர்தல் முடிவுகளும் நிருபித்துள்ளன.
வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தல் என்பது நெருக்கடி நிலைக்கு பிறகு நடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கத்தக்கது.
இந்திரா காந்திக்கும், காங்கிரஸூக்கும் எதிராக அப்போது அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று திரண்டதுபோலவே, தற்போது பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளன. இந்த எதிர்ப்பு அலை 2019-ம் தேர்தலில் சாதிக்க இன்னும் சில தூரம் பயணப்பட வேண்டும்.