சூ
ரியன் உதிப்பது முதல் அது உச்சிக்கு சென்று மாலையில் மறைவது வரைக்கும் பார்த்து நேரம் சொல்லும் வழக்கம் கிராமங்களில் ஒரு காலத்தில் இருந்தது. கடிகாரங்கள் ஆடம்பர பொருளாக இருந்த காலகட்டத்தில் கிராம மக்களின் நேரம் பார்க்கும் கருவி சூரிய நடமாட்டம்தான். இன்றும் ஆடு, மாடு மேய்க்கச் செல்லும் கிராமத்து பெரியவர்களுக்கு சூரியன்தான் நேரம் சொல்கிறான்.
சூரியனை வைத்தே நேரத்தை துல்லியமாகக் கணிக்கும் சூரியக் கடிகாரத்தை 700 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து நிறுவினான் மாமன்னன் விக்கிரமசோழன். சூரிய நிழலைக் கொண்டு அவன் நிறுவிய இந்தக் கடிகாரம் இன்றும் கம்பீரமாக நின்று துல்லியமாக நேரத்தைக் காட்டுகிறது. இந்த கண்டுபிடிப்பை நிறுவிய இடம்தான் திருவிசநல்லூர். இந்த ஊரின் சிறப்பும் இந்த சூரியக் கடிகாரம்தான்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர். ஊரின் நடுநாயகமாக உள்ள சிவன் கோயிலில்தான் விக்கிரமசோழன் திருச்சுற்று மாளிகை உள்ளது. சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்த சுற்றுச்சுவரில்தான் சோழர் கால சூரியக் கடிகாரம் உள்ளது. சுவற்றில், பெரிய இரும்பு கம்பி நடப்பட்டு அதனைச் சுற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் அரை வட்ட அளவில் எழுதப்பட்டுள்ளன. சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் இந்த கம்பியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அந்த எண்ணைக் கொண்டதுதான் அப்போதைய நேரம்.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த சூரியக் கடிகாரம், பண்டைய தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அதன்பிறகு கோயில் திருப்பணிகளின்போது பண்டைய எழுத்துகளுக்குப் பதில் தற்போதைய தமிழ் எழுத்து வடிவத்தில் மாற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளைக் கடந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத காலக் கடிகாரமான இது தமிழர்களின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது. நேரம் சரியில்லை என்பதற்காக கும்பகோணம் கோயில்களுக்குச் செல்லும் மக்களே, ஒருமுறை சூரியக் கடிகாரத்தை பார்க்கவும் நேரம் ஒதுக்கி திருவிசநல்லூருக்கு சென்று வாருங்கள்.