மூ
டநம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட சமூக விழிப்புணர்வுடன் முற்போக்கு படைப்புகளை தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்து வருகிறார் வாழைப்பழ வியாபாரியான துறையூர் க.முருகேசன்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகிலுள்ள ஒக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசனுக்கு இப்போது வயது 60. அந்த கால எஸ்எஸ்எல்சி படித்தவர். சிறுவயதிலிருந்தே தமிழ் மீதான ஆர்வத்தால் பத்திரிகைகளுக்கு துணுக்குகளை எழுதி வந்துள்ளார். பின்னர் தனது 19-வது வயதில், 1974-ல் நீலா என்ற பெயரில் சமூக விழிப்புணர்வு நாடகமும் 1986-ல் உதயகீதம் என்ற சீர்த்திருத்த கருத்துள்ள நாடகமும் 1989-ல் கண்ணீரே கதை எழுது என்ற நாடகமும் எழுதி, சுற்றுவட்டார கிராமங்களில் பலமுறை அரங்கேற் றினார்.
இதன் பிறகு 2010-ல் அவரது முதல் குறுநாவல் செங்குருதி வெளியானது. திருச்சி மாவட்ட அளவில் முத்தமிழ் கலைப் பண்பாட்டு மையத்தின் முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து ‘பச்சைமலைக் குயில்’ சிறுகதை தொகுப்பை வெளியிட்டார். இதற்கு, கார்முகிலோன் நினைவுப் பரிசுப் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்தது. வாண்டுப் பயல், குமார் என்ற பெயரிலான சிறார்களுக்கான சிறுநூலையும் வெளியிட்டார். பத்திரிகை ஒன்றில் மாயை என்ற தலைப்பில் அவர் எழுதி வந்த வரலாற்றுத் தொடரும், மாண்புறு மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு நூலும் கொண்டு வரும் பணிகள் நடக்கின்றன.
தள்ளுவண்டியில் வாழைப்பழ விற்பவரின் எழுத்து தாகம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. துறையூர் பயணியர் மாளிகை அருகே தனது தள்ளுவண்டியில் வாழைப் பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்த முருகேசனை சந்தித்தோம்.
“விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். திருமணத்துக்குப் பின் சிறு பத்திரிகை ஒன்றில் வேலை பார்த்தேன். பின்னர் கூலி வேலைக்கு போய், இப்போது 10 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் வாழைப்பழம் வியாபாரம்தான். சிறுகதை என்பது ஒரு நுட்பமான கலை. பெரிய எழுத்தாளர்கள் அளவுக்கு இல்லையென்றாலும் கிராமப்புறங்களில் பரவிக்கிடக்கும் மூடநம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகளை வைத்துப் பணம் பறிக்கும் கும்பல்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எழுத ஆரம்பித்தேன். பழம் விற்கும் நேரம் போக கிடைக்கும் நேரத்தில் எழுதி வருகிறேன்” என்கிறார் இந்த தள்ளுவண்டி எழுத்தாளரான வாழைப்பழ வியாபாரி.
எந்தச் சூழலில் ஒருவர் படைப்புகளை எழுதுகிறார் என்பது விஷயமல்ல, அந்த எழுத்துகள் எவற்றை பேசுகின்றன என்பதுதான் முக்கியம். அந்த வகையில் முற்போக்கு கருத்துகளை வலியுறுத்தும் முருகேசனின் எழுத்துகளை வாசிக்கலாம்.