வா
ய்ப்பும், வசதியும் இல்லாத பழங்குடிகளான நரிக்குறவர் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் நர்சிங் மாணவியாக உயர்ந்திருக்கிறார். கூடவே தன் சமூகத்து பிள்ளைகளையும் கை தூக்கி விட உழைக்கிறார். இதனாலேயே நரிக்குறவ சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
அவர் பெயர் கவுசல்யா. புதுச்சேரியில் நரிக்குறவர் சமூகத்தில் இருந்து வந்த முதல் செவிலியர் மாணவி. புதுச்சேரி - லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த இவரை அடையாளம் கண்டு, படிக்க வைத்திருக்கிறது ஒரு தனியார் தொண்டு நிறுவனம். தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பட்டயப் படிப்பு (பொது செவிலியர் மற்றும் மகப்பேறு) படிக்கும் கவுசல்யா குறித்து அவர்களிடம் கேட்டோம்.
“கவுசல்யா சிறுமியாக இருக்கும்போதே அவரது பெற்றோர், அவர்களது சமூக வழக்கப்படி திருமணத்துக்கு ஏற்பாடுகளை செய்தனர். உரிய ஆலோசனைகளை வழங்கி, படிப்பதன் அவசியத்தை புரிய வைத்து கவுசல்யாவை மீட்டு படிக்க வைத்தோம். இதனால் அவரை பெற்றோர், சமூகத்தினர் ஒதுக்கி விட்டனர்.
கடந்த 2012-ல் கவுசல்யாவை மீட்டு, எங் கள் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்து படிக்க வைத்தோம். கல்வி மீதான ஆர்வம், அவரை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரியில் நர்சிங் படிக்க வைத்திருக்கி றது என்றனர் தொண்டு நிறுவனத்தினர்.
புதுச்சேரி நரிக்குறவர் சமூகத்தில் இவர் தான் முதல் செவிலியர் மாணவி. தொண்டு நிறுவனத்திலேயே தங்கி படிக்கிறார்.
கவுசல்யாவை சந்தித்தோம். ‘‘நான் மற்ற பிள்ளைகளைப் போலவே விளையாடுவதும் அப்பா -அம்மாவுடன் சென்று பலூன், பாசி மணி விற்பதுமாகவேதான் இருந்தேன். என்னைப் பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்த்த போது எனக்கு படிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. பின்னர் படிப்பு பற்றி புரிய வைத்தனர். இப்போது செவிலியர் படிப்பு படிக்கிறேன்.
நர்சிங் முடித்து மேலும் படிக்க வேண்டும்; நல்ல நிலைக்கு வர வேண்டும், என்னுடைய சமூகத்துப் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும், அவங்களும் முன்னேறணும்; இது என் ஆசை’’ என்கிறார் கவுசல்யா.
கவுசல்யாவின் இந்த முயற்சியை அங்கீகரித்து, தனியார் அமைப்பு ‘குழந்தை தலைவர் விருது’ வழங்கும் விழாவில், அவருக்கு ‘எரிக் எரிக்சன் விருது’ வழங்கி கவுரவித்தது.